பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107


மெல்லிழை மகளிர் நீராடுகின்றனர். புனலிடை இறங்கி அவர்கள் கூந்தலில் சூடியுள்ள மலர்களில் வண்டுகள் மொய்த்திருக்கின்றன. அவ்வண்டுகள் புனலில் மிதந்து வரும் குவளை மலர்கள் மேல் பாய்ந்தும் தேனை உறிஞ்சு கின்றன. அவ்வாறு மங்கையர் கூந்தலில் தங்கியிருந்த வண்டுகள், புனலிடை மிதந்துவரும் குவளைகள் மேல் பாய, மகளிர் கண்களுக்கு அக் குவளைகள் பொருந்துவன-அல்லவாதலால், அவ்வண்டுகள் அக்குவளைகளைத் தாக்குகின்றன என்று கற்பனை செய்து பாடியிருக்கிறார் உமறு.

"இருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடைதிளைப்பச்
சரிந்த கூந்தலி விருந்தவண் டெழுந்துழந் தடத்தில்
விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப்
பொருந்து மோவெனச் சினத்துடன் உதைப்பதுபோலும்"[1]

வானில் வலம் வரும் பிறை நிலவின் இனிய தோற்றம் வாவி நீரில் தெரிகிறது. தெளிந்த வாவி நீர், பூந் தாது உதிர்ந்து விழுதலால் அலைவுறுகிறது. அலைவுறும் நீர் அலைகளுக்கு இடையே தெரியும் பிறைநிலவின் பிரதிபிம்பம் ஓடமொன்று, திரைகளிற் தத்தி ஒடுவதுபோல் தெரிகிறது கவிஞருக்கு,

"தோட விழ்ந்துபூந் தாதுகக் குடத்தினச் சுரும்பு
பாட வாவியுள் இளநிலாத் தோற்றிய பான்மை
சாடும் வார்புனல் அலை தரத் திரைகளிற் தத்தி
ஒடமோடுவ தொத்திருந் தனவென ஒளிரும்", [2]

வண்டுகளும் சுரும்புகளும் பாடும் பாடலோசை முகம் மதுவை வாழ்த்தும் வாழ்த்தோசை என்று கற்பனை செய் திருக்கிறார் உமறு.

  1. 1. சீறா நாட்டுப்படலம் 48
  2. 2. சீறா நாட்டுப்படலம் 4