பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மூன்று காண்டங்களையும், 92 படலங்ளையும், 5027 பாடல்களையும் கொண்டதாகச் சீறா விளங்குகிறது.

தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் தேர்ந்த ஞானமும் , கொண்டிருந்த உமறுப்புலவருக்கு, காப்பியம் படைப்பது கைவந்த கலையேயாயினும் சில இடர்பாடுகள் அவருக்கு எதிர்ப்படச் செய்தன.

ஏனெனில் அவருடைய காப்பியத்தின் தலை நாயகர் வரலாற்றின் முழு ஒளியில் பிறந்த இறைவனின் தீர்க்கதரிசி அண்ணலார் அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும்,செயலும், அவர்கள் திருமுன் நடந்த நிகழ்ச்சிகள் பதியப்பட்ட வரலாறாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வரலாற்று நாயகரின் வாழ்வையே மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, ஆயிரம் ஆயிரமாகத் தமிழகத்தில் நிலைத்து நீடித்து இசைபட வாழ்ந்திருக்கிறார்கள்

இந்தப் பின்னணியில் கவிஞர் உமறு, தம் காப்பியப் பெருமானார் மீது, இலக்கியச் சுவைக்காக, கற்பனையை ஏற்றிக் கூறினால் அது இன்னலுக்கு வித்திட்டிருக்கக்கூடும்.

ஏனெனில், "நான் சொல்லாததையோ, செய்யாததையோ, நான் சொன்னதாகவோ, செய்ததாகவோ சொல்வது பாபமாகும் " என அந்த உண் மையின் துரதர் அவர்கள் எச்சரித்துச் சென்றிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், புனைவுகளுக்கு அறவே இடம் மறுத்தாலும், காப்பியச்சுவை குன்றிவிடும் என்பதையும் கவிஞர் உமறு அறிந்திருந்தார்.

எனவே தான் வரலாற்று வரம்பிலிருந்து வழுவி விடாமலும் புனைவுகளை முற்றாகப் புறக்கணித்து விடாமலும் காப்பியம் படைக்க வேண்டிய கட்டாயததில் நிறுத்தப்பட்டார் கவிஞர் உமறு.