பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


"சீறாப்புராணம் - நல்ல கவிதைகளின் களஞ்சியம், கற்பனை திறன்களின் கருவூலம், கருத்துக்களின் உருவப்பேழை. கவரும் உவமைகளின் பெட்டகம்' எனக் கூறிமுடிக்கும் பாங்கு நயர்கத்தக்கதாக உள்ளது.

தமிழ்ப் பண்பாடுகள் சீறாவில் நிரவியுள்ள தன்மையை சிலம்பொலி செல்லப்பனார் சொல்லிச் செல்லும் தன்மை உலகளாவிய இருபெரும் (தமிழ், இஸ்லாமியப்) பண்பாடுகளின் ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது.

'சீறாப்புராணம், சீரிய புராண'மாக திகழும் விதத்தை சென்னைப் பல்கலைச்சழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியனார் விளக்கிக் காட்டும் முறை சிறப்பாக இருக்கிறது.

உமறு தரும் பெண்மை நலத்தைப்பற்றி பேராசிரியை கிருட்டிணா சஞ்சீவி எழுதியுள்ள கட்டுரையை இன்னும் சிறிது விரிவுபடுத்தினால் 'டாக்டர்' பட்டம் பெறுதற்குரிய பொருளாக அமைவது திண்ணம் எனலாம்

சீறாவில் இயற்கை கடந்த செயல்களை தக்கலை பஷீர் விவரிக்கும் விதம், சிறப்பானதாக அமைந்துள்ளது.

முதுபெரும் தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி சீறாவின் காப்பியப் பண்புகளை கட்டுரைக்குரிய பண்போடு எடுத்துக் காட்டுகிறார்.

'உமறுவின் தனித்திறனை' விளக்க வந்த ஜே.எம்.சாலியின் கட்டுரையில் அந்தத் 'திறமை' 'சாலி' யின் தனித்திறன் பளச்சிடுகிறது.

பானை சோற்றிலே ஒரு பருக்கையைப் பதம் பார்ப்பது போல சீறாவில் ஒரு கவிதைக்குக் கவி கா.மு.ஷெரீப் அவர் தந்துள்ள விளக்கம் கருத்தினை, ஒவ்வொரு வரியோடும் பொருத்தம் பார்க்கும். அந்த முறை நமக்குப் புதிய முறையாகத் தெரிகிறது. அந்தப் பொருத்தத்திலே கலைமாமணியின் தனி முத்திரையில் பொருந்தியிருக்கிறது.