பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154


"உறைகொ ணாந்தக முன்கையி னாயின
விறல்கெ ழீஇவய வீரருந் துஞ்சினர்
பெறுக நீயெதி ரிம்மொழி பேசினை
யிறைவ னேயெனைக் காப்பன்மற் றில்லென்றார்." [1]

இதனைக் கேட்டதும் அவன் கையில் ஏந்திய வண்ணம் இருந்த பிரகாசமான வாள் (கோணம்) அவனது சிவந்த கையிலிருந்து நிலத்தில் விழுந்துவிட்டது. ஒருவர் நினைத்தபடி இன்னொருவரைக் கொல்ல முடியுமோ என ஒரு சேள்வியையும் இங்கே எழுப்புகிறார் கவிஞர். இதுதான் அந்தச் செய்யுள்,

"அன்ன காலையி னாங்கவ னேந்திய
மின்னு கோணம் விரல்கள் சிறப்புற
மன்னு செங்கை பறித்துமண் வீழ்ந்தன
வுன்னு மப்படி கொல்லவு மொண்ணுமோ." [2]

தூதுர் எதிர்பாராத பதில் அவன் கையிலிருந்து விழுந்த வாளினை (வைவாள்) நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒரு நொடிப்பொழுதில் நிலத்திலிருந்து எடுத்து 'இனி உன்னுடைய இனிய உயிரை வானலோகத்தின்கண் போகச் செய்வேன். அதனைத் தடை செய்யக்கூடியவர் உலகில் யாவர்? ஒருவருமில்லை’ என்று கூறினார்கள். இக் கருத்துக்களே,

'விடுத்த தண்ணிடை வீழ்ந்தவை வாளினை
யெடுத்து வள்ள லினியுன தாருயிர்
படுத்து விண்ணுல கேற்றுவன் பாரினிற்
றடுத்து நிற்பவ ரியாரெனச் சாற்றினார்"[3]

என அமைந்துள்ளன. தனக்கு உதவி செய்ய அங்கு எவருமில்லை என்பதை உணர்ந்துகொண்ட அந்த தாதுர் என்னும்


  1. 1. சீறா. தாத்துற்றஹக்குப் படலம் 50
  2. 2. சீறா. தாத்துற்றஹக்குப் படலம் 51
  3. 3. சீறா. தாத்துற்றஹக்குப் படலம் 52