பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170


தோரணையில் முஸ்லிம்கள் ஆலோசனை நடத்தினர். அண்ணல் நபி (சல்) அவர்கள் உடனே தங்கள் அருமைத் தோழர்களை ஒன்று திரட்டி கலந்தாலோசித்தார்கள், உதுமான் (றவி) அவர்களின் கொலைக்குப் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள். இத்துறையில் ஈடுபடுவதற்கான உறுதிமொழி தோழர்களிடமிருந்து கோரப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக உறுதி மொழி கூறினர் வாய்மைப்பாடு நிகழ்த்தினர். இதற்கிடையில் உதுமான் (றலி) அவர்கள் கொலை செய்யப்பட்டது பொய் என்னும் செய்தி பெறப்பட்டது. இத் தருணத்தில் அல்லாஹ்விடமிருந்து ஒர் ஆயத்து இறங்கியது. அந்த ஆயத்திலே 'வாய்மைப்பாடு நிகழ்த்தின எல்லோருக்கும் அல்லாஹூத் த ஆலா நல்லருள் பாலித்தான்' என்று கூறப்பட்டிருந்தது. இந்தக் கருத்துக்களை கொண்டதே இந்தச் செய்யுள்.

"மறையுண ருதுமா னென்னு மன்னவ ரிறத்தல்பொய்யென்
றறைதரு வசனங் கேட்டங் ககமகிழ்ந் திருந்தபின்னர்
நிறை தரு வாய்மைப் பாடு நிகழ்த்தின பேர்கட்கெல்லா
மிறையவ னருளி னாலே யாயத்தொன் றிறங்கிற்றன்றே." [1]

இவ்வாறு அல்லாஹூத் தஆலாவினால் இறக்கப்பட்ட அந்த இறைமறை வாக்கியத்தின் கருத்தினைப் புரிந்து கொண்ட அண்ணல் நபி (சல்) அவர்கள் அங்கிருந்த தோழர்களுக்கு அதன் தாத்பரியத்தை விளக்கினார்கள். அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் சுவர்க்க லோகத்தை (உவணை) அடைவார்கள். அவர்களுக்கு நரக லோகம் (நிரையம் உரித்தாக மாட்டாது. இவ்வாறு அதன் தாத்பரியம் விளக்கப்பட்டமையே இவ்வாறு ஒரு செய்யுளில் அமைத்துப் பாடப்பட்டுள்ளது.


  1. 1. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 110