பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

செய்யப்பட்டவை. ஆகவே சரித்திர நாயகரைப் பற்றிப் பாடப்படும் காப்பியம் ஒன்று எல்லா இலக்கியப் பண்புகளையும், அணிகளையும் தயங்களையும் தன்னகத்தே கொண்ட தாய்ச் சரித்திர உண்மைக்கு மாறுபடாமலும் இருக்க வேண்டும், எனவே காப்பிய நாயகனைத் தன் விருப்பம் போல் புனைந்த கற்பனை வானில் பறககவிடவோ, விரும்பிய வண்ணம் தீட்டவோ வடிக்கவோ உமறுப் புலவருக்கு வாய்ப்பில்லை. கவிஞருடைய கற்பனையூற்றை, உண்மை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே கட்டுப்படுத்தும். வரலாறு என்னும் கட்டுச்கோப்புக்குள் காவியம் சமைக்கும் இன்றியமையாமை புலவருக்கு ஏற்பட்டது. இருந்த போதிலும் எப்படியோ நபிகள் நாயகத்தைப் பற்றிச் செவி வழிவந்த கர்ண பரம்பரையான கதைகள் சிலவும், வரலாற்று ஏட்டில் பதிவு செய்யப்படாத நிகழ்ச்சிகள், செய்திகள் சிலவும் சீறாப்புராணத்தில் இடம் பெற்றுள்ளன.

உமறுப்புலவர் தமிழ்ப் பண்பாட்டில் ஊறித் திளைத்தவர். நாயகம் வாழ்ந்த இடம் அவருக்குப் பாலைவனமாகக் காட்சியளிக்காமல் சோலைவனமாகக் காட்சியளிக்கிறது. நானிலத்தின் வளங்கள், தமிழ் நாட்டுணர்வு, தென் பாண்டி நாட்டுக் குரவை ஒலி, அராபியப் பெண்கள் தமிழ் மாதரைப் போன்று திலகம் சூடினமை முதலிய தமிழ்மரபுகளைக் குறிப்பிடுகிறார். சுருங்கச் சொல்லின் அரபுநாட்டுத் தலைவரைத் தமிழ்நாட்டுச் சூழலில் சந்திக்கும் வாய்ப்பினை புலவர் சீராக வழங்குகின்றார். புராணத்தில் இடம்பெறும் விழுமிய கருத்துகள் இஸ்லாமியத் தத்துவக் கருத்துகளும், பெருமானாரின் சீரிய அறிவுரைகளுமாகும். ஆனால் அவை உடுத்துள்ள உடையோ, புனைந்துள்ள அலங்காரமோ தமிழுடையும், தமிழ் அலங்காரமுமாகும்.

உள்ளதை உள்ளவாறு கூறாமல் உணர்ந்தவாறு உள்ளம் விரும்புவாறு அமையும் கற்பனை, இலக்கியத்திற்குச் சிறப்பைத் தரும். சீறாக் கவிதையின் கற்பனை நயத்தையும், உவமை நயத்தையும், கன்னல் நிகர்ச்சுவையையும் சுவைக்க