பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


பாத்திமா அவர்கள் தந்தையிடத்துத் தனி அன்பும் அவர் வளர்த்த தீன் வழியில் பெரிதும் நம்பிக்கையும், தந்தைக்கு இடையூறுகள் செய்து வந்த பகைவரிடத்து அடங்கா சினமும் கொண்டிருந்தார் எனினும் இடம், பொருள். ஏவலுக்கிணங்க தந்தைக்குற்ற சிறுமைகளைக் கண்டித்துப் பொறுத்திருந்த தகைமை நிறைந்தவர் பாத்திமா.

தொழுகைக்கு இடையூறு செய்ய எண்ணி ஒரு கொடியவன் அறுத்த ஒட்டகத்தின் இரத்தம், குடல், எலும்பு, சிதைந்த தசைகள் யாவற்றையும் கொண்டு வந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிடரியின் மேல் போட்டான் நபிகள் நாயகமோ இந்தச் சிறுமையைச் சிறிதும் மனத்துட் கொள்ளாது ஐம்புலன்களையும் அடக்கி, நெற்றியைத் தரையில் வைத்து ஸுஜூது செய்தார்கள். பிடரியிலிருந்த சுமை அசையாதிருப்பதையும் நபி ஸுஜூது செய்ததையும் பகைவர் கூடிப் பார்த்து எள்ளி நகையாடுவதைக் கண்டு, ஈர நெஞ்சுள்ள ஒருவன் ஒடி பாததிமாவுக்குத் தெரிவித்தான்.

அதைக்கேட்ட பாத்திமா உள்ளம் புழுங்கி எழுந்து கஃபாவில் வந்து தந்தையின் பிடரியில் இருந்த சுமையை எடுதது எறிந்து சுத்தம் செய்து விட்டுப்போனார். தந்தைக்குத் தொண்டு செய்வதில் தனி இன்பம் கண்ட பாத்திமா அவர் தம் சொற்களை மந்திரமாய் ஏற்று நடந்தார்.

திருமண நிகழ்ச்சிக்குப் பின் தந்தையை வந்து வணங்கிய பாததிமா புதிய அணிகலன்களையும், பழைய குப்பாயத்தையும் அணிந்திருந்ததைக் கண்டு அதற்கு என்ன காரணம் எனறு நபிகள் நாயகம் பாத்திமாவை வினவினார். அதற்கு தந்தையே, நான் புதுக் குப்பாயத்தைத் தான் இரவு அணிந் திருநதேன். ஆடையில்லாது குளிரால் நடுங்கிய எளியவரொருவர் இன்று அதிகாலையில் நம் மனை வாசலில் வந்து நின்று இரந்து கேட்டார். அவருக்கு அப்புதிய குப்பாயத்தைக் கொடுத்து விட்டு பழையதை அணிந்திருக்கின்றோன்' எனறார்.