பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

என்று கூறுகிறார். சீலமெலாம் ஒருங்கு திரண்டு சேர்ந்ததெழுந்த சீரியர், குறைவில்லா நிறைவுடைப் பூரண மனிதர் நபிகள் நாயகம். அவர்கட்குக் கறை கொண்ட நிலவை உவமை காட்டலாமா? "வையகம் சிறப்ப" என்பது சிந்தனைக்குரியது. முழுமதி எழுவது மருத நிலத்திற்கு மட்டும் குளிர்ந்த ஒளியைத் தருவதற்கல்ல; உலகம் முழுமைக்கும் வையகத்தின் வளவாழ்வையே, நானிலத்தின் நன்மையையே புலவர் மனதில் கொள்கிறார். என்னே அவரின் பரந்த உள்ளம்! சிறந்த எண்ணம்! எப்படி முழுமதி உலகம் முழுமைக்கும் சொந்தமோ அதேபோன்று நபிகள் நாயகம் அவர்களும் உலகம் முழுமைக்கும் சொந்தம்,மன்பதைகட்கெல்லாம் அவர் ஒரு அருட்கொடையல்லவா என்று சொல்லாமற் சொல்லி வியபூட்டுகிறார். சீறாப்புராணமும் இலக்கிய வானிலே ஒர் இனிய நிலாத்தானே! உமறுவின் புலமையும் ஆழி நிகர்த்ததுதானே! உழவர் வயலில் நாற்று நடும் காட்சி, அலைகளுக்கிடையே கடலில் முழு நிலா எழும் காட்சி, இவ்விரண்டின் இணைப்பு. இதை இயைபுக் கற்பனை (Associative Imagination) என்பார்கள். கவிதையில் உண்மையிலேயே தண்ணிலவு கொஞ்சி விளை யாடுவதோடு தமிழ் நாட்டின் அன்றைய வேளாண்மைக் சிறப்புப் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. கவிஞரின் கற்பனை நயம் பயக்கும் இன்பத்தில் நம் நெஞ்சமும் கடலலையென நடம் புரிகிறது. மதி எழுவதுபோன்று 'மதி' யும் சுடர்விடுகிறது.

அடலேறு அலி (றலி) அவர்கட்கு மணக்கோலம் செய்விக்கும் பொழுது புத்தாடை உடுத்தினர். அவ்வாடை நிலவொளியில் உள்ள கதிர்களையே நூலாக நூற்றுச் செய்ததுபோல இருந்ததாம்.

"தெள்ளிய மதியின் கதிரினை நூற்றுச்
செய்தெனுந துகிலிடைச் சேர்த்தி..."[1]



2.

  1. 1 சீறா பாத்திமா திருமணப் படலம் 114