பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


மதிக் கதிரை நூற்பது உலகில் இல்லை. இது இல்பொருள் உவமையணியாகும் இவ்வரிய உவமை வாயிலாகத் தமிழ்நாட்டுக் கைத்தொழில் வளத்தையும் நுட்பத்தையும் நம் தொழிலாளர் தம் கைத் திறனையும் நயம்பட நவில்கிறார் கவி, அலி (றவி) அவர்களும் பாத்திமா (றலி) அவர்களும் இணைபிரியாது இல்லறம் நடத்தியதைச் "சொல்லும் பொருளும் போல" வாழ்ந்தனர் என்கிறார். சொல்லை விட்டுப் பொருளைப் பிரிக்க முடியாது. அலி (றலி) யையும், பாத்திமா (றலி) யையும் அதுபோலப் பிரிக்கமுடியாது என்பது கருத்தாகும்.

"சொல்லுடன் பொருளெனச் சுருதி நூன்முறை
இல்லுறைந்து ஒருவருக்கொருவர் இன்பமுற்று
அல்லெனும் கூந்தலும் அரசர் சீயமும்
மல்லலம் புவியிடை மகிழ்வின் வைகினார்." [1]

[சுருதி = வேதம்; அல்=இருள்: மல்லல் = வளமை , செல்வம்]

புறவாழ்வை வருணனை செய்த புலவர் கோமான் அக வாழ்வை வருணனை செய்வதைப் பார்ப்போம்.

"அவர்கள் இருவரும் கருத்துப் பேழையாம் திருக்குர் ஆன் வகுத்திட்ட வழி நின்று சீருஞ்சிறப்புமாய் இல்வாழ்வு நடத்தினர். இன்பம் நுகர்ந்தனர். ஒருவருக்கொருவர் இன்பமுற்று" என்று சொல்வதில்தான் எத்தனை நயம்? பரிவர்த்தனைக் காதல் (Reciprocatory Love) என்றல்லவா உணர்த்துகிறார்! அல் என்றால் இரவு, இருளாகிய கருநிறக் கூந்தலையுடைய பாத்திமா (ரலி) என்று கூந்தலின் சிறப்பை உருவக அணியாற் சுட்டிக் காட்டுகிறார்.

இல்லுறைந்து மல்லலம் புவியிடை மகிழ்வின் வைகினார் -யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பரந்த நோக்கோடு நாட்டு மக்கள் வாழ்விலும் மகிழ்வை


  1. 1. சீறா பாத்திமா திருமணப்படலம் 220