பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243


விருந்துாட்டு படலம்

பெருமானார் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற ஒரு விருந்தின் பொழுது, குறைந்த உணவினைக் கொண்டு எண்ணிறந்தோர்களுக்குப் பெருமானார் அன்னம் பரிமாறிய அற்புத நிகழ்ச்சி இதில் உரைக்கப்படுகிறது.

யாத்திரைப் படலம்

இறைவன் திருப்பொருத்தத்திற்கு இசைய, பெருமானார் நபிப்பட்டம் பெற்ற, பதினான்காம் ஆண்டு ரபியுல் அவ்வல் திங்கள் ஐந்தாம் தேதி திங்கட்கிழமை இரவில் மக்க மாநகர் விட்டு மதீன மாநகர் செல்லத் திட்டமிட்டுள்ள விபரம் குறைஷிகளுக்கு எப்படியோ தெரியலாயிற்று பொல்லாக் குறைஷிகள் எல்லோரும் திரண்டு நபியவர்கள் தங்கியிருக்கும் இல்லத்தைச் சுற்றி வளைத்துக் கண்காணித்து வரலாயினர். அமரருக்கரசர் மொழிப்படி, திருமனைப் புறத்தினின்று ஒரு பிடி மண் எடுத்து யாசீன் ஓதி நாற்றிசையும் வீசி பயணமானார் (78, 96, 97) எனும் அற்புதம் ஒதப் பட்டது.

புனிதர் முகம்மது (சல்) வும் அபூபக்கரும் தெளர் குகையில் உறைந்திருக்க, குகை வாயில் சிலந்தி பூச்சியும், புறாவினமும் கூடுகட்டி முட்டையிட்டு இருப்பதைக் கண்டு தேடி வந்த விரோதிகள் திசைதோறும் புகுந்து தேடி, பொதும்பர் வாயிலை நெருங்கியபோது சிலம்பி நூலும் நீள்சிறைப் புறா வின் கூடுங் கண்டு முகம்மதுவினை காண்கிலோம் என விலகினர். (101 முதல் 114) இயற்கைச் செயல்களும் இயற்கை கடந்த செயல்களாக அமைந்துள்ளது இறையின் செயலன்றோ!

விடமீட்ட படலம்

திரு மக்க மாநகர் விட்டு (ஹிஜ்ரத்தின் பொழுது) பகைவர் தம் கண்ணினின்றும் நீங்கி; நபி பெருமானாரும் அபூபக்கரும் தெளர் மலைக் குகையில் வந்துறைந்தனர்.