பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீறாவில் அறபு,
பாரசீகச் சொற்கள்

அல்ஹாஜ் எம். எம். உவைஸ், M.A., Ph D.

ஒன்றை மற்றதிலிருந்து பிரித்துக் காட்டுவது முன்னையதில் உள்ளதும் பின்னையதில் இல்லாததுமான சிறப்பியல்பேயாம். இவ்வாறு ஒன்றை ஒன்றிலிருந்து பிரித்துக் காட்டும் சிறப்பியல்புகள் இலக்கியத்திலும் உள்ளன. சிறப்பாகக் காப்பியங்களை எடுத்துக் கொண்டால் இத்தகைய சிறப்பியல்புகள் பலவற்றைக் காணலாம். பல்வேறு சமய அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் அவ்வச் சமயங்களுக்கே உரிய சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குவது கண்கூடு. அதேபோன்று பொருளடக்கத்தைப் பொறுத்த வரையிலும் காப்பியத்துக்குக் காப்பியம் வேறுபடுகின்றது. சொல்லாட்சியைக் கொண்டு ஒரு காப்பியத்தின் சிறப்பியல்பினைக் கணிக்கலாம். கவிஞன் தான் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களைப் பெற்று தனது இலக்கியப் படைப்புகளில் பயன்படுத்தத் தயங்குவதில்லை. சில சமயங்களில் இத்தகைய சொற்கள் ஒரே இனத்தைச் சார்ந்த பல்வேறு மொழிகளிலிருந்து பெறப்படுகின்றன. வேறு சில சமயங்களில் இன அடிப்படையில் தொடர்பு அற்ற வேற்று மொழிச் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய ஒரு சிறப்பியல்பினைத் தான் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் அவற்றினிடத்தைக் கொண்டு திகழ்கின்றன. தமிழ் இலக்கியத்தில் தோன்றிய ஏனைய காப்பியங்களுடன் ஒப்ப நோக்கும் பொழுது இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்களில் இத்தகைய சிறப்பியல்பு அமைந்திருப்பதைக் காணலாம்.