பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


ஒரு தெள்ளுதமிழ்க் காவிய ஆறு. அவ்வாற்றில் கலைச்சொற்கள் அலை வீசுகின்றன. அணிமுத்துக்கள் அழகொளி வீசுகின்றன. கருத்துக் கருவுடை மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. ஆற்றின் இருமருங்கிலும் உவமையாம் மெல்லிய பூங்காற்று உலவுகிறது. சிந்தனை பூங்கொத்து, காற்றில் நறுமணத்தைப் பரப்புகிறது. பயில்தோறும், பயில்தோறும் புதிய இன்பஞ் சுரக்கும் அருளமுத ஊற்று. அன்றாட வாழ்க்கையில் அகப்பட்டு அகமும், புறமும் புண்பட்டு அல்லலுறும் நெஞ்சிற்கு இன்பமும், அமைதியும் தேடித் தரும் அருமருந்து மனதுக் கடங்காத கற்பனைகளை வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் பின்னிப் பிணைத்து உணர்ச்சி எனும் புனலில் அவற்றை நனைத்தெடுத்து. அருமையான கவிதைகளாக்கி, வறண்ட உள்ளங்களை வளப்படுத்துகின்றார் உமறு. சீறாவை அனுபவிப்போர் பெறும் இன்பம் கொம்புத்தேனாகத் தெவிட்டாத அமுதமாகத் தித்திக்கும் என்பதில் ஐயமில்லை. என் நெஞ்சத்திரையிலே நிழலாடிய பாட்டொன்றை மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன்.

"அழகு தமிழ் உமறு பழகு தமிழ்ச்சீறா
ஆழப்பயில அகமினிக்கும் பொங்கு சுவை
அருவியாகுஞ் செஞ்சொற் கொஞ்சச் செவியினிக்கும்
பருகிட நாவினிக்குமே.”

என் துவக்க உரையை நிறைவு செய்வதற்கு முன் ஒரு சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். சீறாவின் சுத்தமான, தெளிவான, ஆதாரபூர்வமான பதிப்பொன்றை 1974ஆம் ஆண்டு கவிஞர் நாச்சிகுளத்தார் வெளியிட்டுத் தமிழ்கூறும் நல்லுலகிற்குக் காணிக்கையாக்கினார்கள். எனினும், சீறாப்புராணத்தின் அருமை பெருமை இன்னும் "குடத்துள் விளக்காகவே" உளது. உரை எழுதப்பட வேண்டும், ஆராய்ச்சி நூல்கள் எழுதப் படவேண்டும். பட்டி மன்றங்களில் முழக்கப்படவேண்டும். பேராசிரியர்கள் டாக்டர் பட்டம் பெற ஆய்வுக் கட்டுரைகள் (Thesis) வடிக்க வேண்டும்.

அல்ஹாஜ் எஸ். எம். சுலைமான். ஐ.ஏ.எஸ்