பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29



தலைமைப் பொழிவு

பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டினருடன் நல் வாணிபம் செய்த வணிகர்களில் முக்கியமானவர்கள் அரபு மக்கள்.

பொன்னும், மணியும், அகிலும், சந்தனமும், தென் கடல் முத்தும், கீழ்க்கடல் பவழமும், 'நீரில் வந்த நிமிர் பரிப் புரவி'யும் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட குதிரைகளும், காலில் வந்த கருங்கறி மூடையும் (நில வழியாக வந்த மிளகு மூடைகளும்) அரபுகளின் வியாபாரச் சரக்குகளாக இருந்தன

தமிழ் நாட்டோடு அரபுகள் செய்து வந்த பரவலான வாணிபத்தைப் பற்றி மார்க்கோ போலோ, இப்னு பதூதா, அப்துல்லாஹ் வஸ்ஸாப் ரஷிதுத்தீன் அபுல் பிதா போன்ற மத்திய கால பிரயாண-வரலாற்றாசிரியர்கள் விவரமாக எழுதியுள்ளார்கள் முத்து, மிளகு அகில், மயிலிறகு, ஏலம், சந்தனம் போன்றவை மேலை நாடுகளில் அபூர்மான பொருள்களாகக் கருதப்பட்டன. அவற்றைத் தங்கள் மரக் கலங்களில் ஏற்றிக் கொண்டு மேலை நாடுகளுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வந்த அரபு மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் கீழ்த் திசை நாடுகளுக்கும் ஒர் இணைப்புப் பாலமாக விளங்கினர்.

அரபு நாட்டவர்கள் அக்காலத்தில் இந்நாட்டுடன் வியாபாரம் செய்வதில் பெருமையடைந்தார்கள். ஹலரத் உமர் ஒரு வியாபாரியிடம் இந்திய வியாபாரத்தைப் பற்றிக் கேட்டபோது அவர் சொன்ன மறுமொழி பின்வாருமாறு "அந்நாட்டில் நதிகள் முத்துக்கள் போலவும், மலைகள் சிவப்புக் கற்கள் போலவும் மரங்கள் நறுமணத் தைலங்கள் போலவும் விளங்குகின்றன". இவ்வாறு குறிப்பிடுகிறார் டாக்டர் மோதிசந்த் என்பார் "இந்திய வணிக நெறிகள்' என்னும் தம் ஆராய்ச்சி நூலில்,