பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290


சொல்லும் (2:132, 256, 3:24, 73, 4:1, 21) இஸ்லாம் அல்லாத தன்மையை உணர்த்த குப்ர் என்னும் சொல்லும் (2:58, 93. 109, 3:80, 4:46, 5:44) பயன்படுத்தப்பட்டுள்ளன. சீறாப்புராணத்திலே தீன் என்னும் அறபுச் சொல்லைப் போன்று அதிசக் கூடுதலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்ட வேறு அறபுச் சொல் இல்லை என்றே கூறி விடலாம். இதனை விடச் சற்றுக் குறைவான எண்ணிக்கையாகவே குப்ர் என்னும் அறபுச் சொல் சீறாப்புராணத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்தில் மாத்திரம் ஐந்து தடவைகள் (5.7, 12, 16, 17) தீன் என்னும் அறபுச்சொல் ஆளப்பட்டுள்ளது, தீன் என்பதனைப் பயிராகவும் குப்ர் என்பதனைக் களையாகவும் உருவகித்தல் முஸ்லிம் கவிஞரின் தமிழ் இலக்கிய மரபாகத் திகழ்வதை இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். சீறாப்புராணத்தில் அத்தகைய உருவகங்கள் இடம் பெற்றுள்ள விதத்தினைப் பார்ப்போம். குபிர் என்னும் களையை அகற்றி கலிமா என்னும் விதையை விதைத்து தீன் என்னும் பயிரை வளர்த்த விதம்,

"அறிந்துவெங் குயிரை யோது மாதிநூற் கலிமா வித்தி
விரிந்ததின் பயிரை யேற்றும் ......"[1]

என வருணிக்கப்பட்டுள்ளது, இன்னொரு சந்தர்ப்பத்தில் இதே பாணியில் இந்தக் கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார்.

"பாரினிற் பரந்த குபிர்க்குல மறுத்துப்
படர்தரு தின்பயிர் விளக்க" [2]

இன்னும் பல சந்தர்ப்பங்களில் குபிரை இருளுக்கும் இந்த இருளை அகற்றும் ஒளியாக இஸ்லாத்தையும் இவ்வாறு உருவகித்துள்ளார் கவிஞர் உமறு.

  1. 1. சீறா பாத்திமா திருமணப் படலம் 29
  2. 2. சீறா அலிமா முலையூட்டுப் படலம் 89