பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


(சல்) அவர்களின் நற்றவ வாழ்க்கையைச் சித்தரிப்பதற்குரிய பின்னணியாகவே அமைந்திருக்கின்றன வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த ஒரு பெருமகனாரைப் பற்றி-அவர்கள் போதனையைப் பற்றி-ஒரு பெருங்காப்பியம் சமைப்பது அரும் பெரும் சாதனையாகும், நபிகள் பெருமானார் இறைவன் மீது கொண்ட அசையாத நம்பிக்கையினாலும், தம் கொள்கை மீது வைத்த மாறாத உறுதியாலும் எப்படி வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள் என்பதையும், நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, ஹஜ் போன்ற உயிர் நாடியான போதனைகளையும் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கொண்ட சீறா ஒரு சீரிய களஞ்சியமாகும். "சொல் நயமும், பொருள் நயமும், ஓசை நயமும், அணி நயமும் ஒருங்கே கொண்டு திகழும் இலக்கியச் சுரங்கம்” வறண்ட உள்ளங்களையும் வளப்படுத்தும் வண்ணக் காவியம், தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய அரும்பெறும் காப்பியம் சீறா என்பது அதனைச் சிறிது படித்துப் பார்ப்பவருக்கும் கூடப் புலனாகும்.

இஸ்லாமியத் தமிழ்த் தொண்டின் ஒரு மிகக் சிறிய பகுதியே சீறாப்புராணமாகும், எத்தனையோ முஸ்லிம் புலவர்கள் இஸ்லாமியப் பணியும் தமிழ்த் தொண்டும் ஒன்று சேரச் செய்திருக்கிறார்கள். "வேதமே முழங்கும் காயல் மாநகர்" என்னும் காயம்பதி, கீழக்கரை, நாகை தொண்டி, கோட்டாது, தென்காசி, நாகூர், பனைக்குளம் போன்ற ஊர்சளில் ஆயிரமாயிரம் புலவர்கள் தோன்றியிருக்கின்றனர். அந்தாதி, அம்மானை ஆற்றுப்படை, உலா , கீர்த்தனை, கும்மி, கோவை, சதகம் போன்ற கவிதை வடிவங்களில் தங்கள் கைவண்ணத்தைத் தீட்டியிருக்கின்றனர் பெரும் புலவர்கள். சிந்து, சித்திரக்கவி, பாமாலை, பிள்ளைத்தமிழ், புஞ்சம, புராணம், பரணி, மாலை முதலிய பாவினங்களிலும் அவர்கள் படைப்பாற்றல் பரிணமிக்கக் காண்கிறோம், இஸ்லாமியக் கருத்துகளை இசைவான இலக்கிய வடிவங்களில் சமைக்கவேண்டும் என்பதற்காக கிஸ்ஸா, முனாஜாத் போன்ற புத்தமைப்புகளையும் அவர்கள் தோற்றுவித்தனர்.