பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

355


அருளுக்கு ஒர் ஒப்பற்ற இருப்பிடமாகத் திகழ்ந்தன. அத்தகைய பிரகாசம் பொருந்தியவர்கள் பயகாம்பர் முகம்மது (சல்) அவர்கள். இக்கருத்துக்களையே உமறுப்புலவர் ஒரு செய்யுளின் இறுதி அடிகள் இரண்டிலும் இவ்வாறு கூறு கிறார்.

"முடிவின்றிய வருட்கோர்மனை யெனுமுண்டக விழியிற்
படருந்துயி லொழிந்தேயொளிர் பயகாம்பரும் விழித்தார்." [1]

அண்ணல் நபி (சல்) அவர்களிடத்து வந்தமை 'பயகாம் படத்தினிலனுகி' (உயை வந்த படலம் 25) என்றும் புனிதத் தன்மை வாய்ந்தவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்கள் என்பது 'தூய ராம்பய காம்பர்' (அந்தகன் படலம் 12) என்றும் சத்தியமே உருவாகக் காட்சியளித்தவர்கள் எம்பெரு மானார் (சல்) அவர்கள் என்பது 'உண்மை சேர் பயகாம்பர். (உமுறாவுக்குப் போன படலம் 30) என்றும் ஒரு போதும் கோபம் கொள்ளாதவர்கள் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் என்பது 'கதமி லாப்பய காம்பர்' (உமுறாவுக்குப் போன படலம் 38) என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெருவழக்கிலே உள்ள மற்றொரு திசைச் சொல் 'யார்' என்பது. முஸ்லிம்கள் 'யார்’ என்னும் இச் சொல்லை ஒரு சிறப்பான கருத்தில் உபயோகிக்கின்றனர், இது பாரசீக மொழியில் உள்ள ஒரு சொல்லாகும். முஸ்லிம்களின் பேச்சு மொழிகளான உருது மொழி முதலியவற்றில் இச்சொல் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்கள் இச்சொல்லை சிறப்பாக நான்கு கலிபாக்களைக் குறிக்கப் பயன்படுத்துவர். அபூபக்கர் (றலி) அவர்களையும் உமறு (றலி) அவர்களையும் உதுமான் (றலி) அவர்களையும் அலி (றலி) அவர்களையும் குறிப்பிடவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் பெருமானார் (சல்) அவர்களுக்

  1. 1. சீறா முறைசீக்குப் படலம் 38