பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

385

முதற் பதிப்பின் வரலாறு:

சீறாப்புராணமோ பல்வேறு கையேட்டுப் பிரதிகளாக இருந்து ஒரே பிழை மயமாகவும், குழப்ப மயமாகவும் விளங்கியது. அதனைச் சீர் செய்து செப்பனிடுவது சேகனாப் புலவருக்கே சிரமமாக இருந்தது. ஒரு நாள் திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் என்னும் புலவர் சேகனாப் புலவரைப் பார்க்க வந்தார். அவர் தமிழ் நூல்களைச் சிறந்து முறையில் பதிப்பித்த பதிப்புலக இரட்டையரில் ஒருவர். மற்றொருவர் விசாகப் பெருமாளையராவர். இத்தகைய பதிப்பாசிரிசரிடம் இந்தச் சீறாவைத் திருத்திச் செப்பனிடுவதற்குள் மூன்று சீறாவைப் பாடிவிடலாம் போலிருக்கிறது என்று கூறினாராம் சேகனாப் புலவர். அவ்விதமானால் அவர் எத்துணைச் சிரமத்தை மேற்கொண்டு சீறாப்புராணத்தைத் திருத்திச் செப்பனிட்டிருப்பார் என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு திருத்தும் போதுகூட அனாவசியமாக எதையும் திருத்திவிடாது உமறுப் புலவருக்குச் சங்கைச் செய்தே அதனைத்திருத்தினார். ஒருமை பன்மை மயக்கத்தைக் கூடத் திருத்துவதற்குச் சேகனாப் புலவரின் உள்ளம் நடுங்கியது. அவர் அவ்வாறு பெருஞ் சிரமத்துடன் சீறாவைத் திருத்தி முடித்தபின் அதன் சுத்த பிரதியொன்று அவருக்குக் கிடைத்துள்ளது. அப்போது அதனையும் தாம் திருத்தி எழுதிய பிரதியையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நாலைந்து செய்யுட்கள் தாம் அதற்கும் தம்முடையதற்கும் இடம் வேறுபட்டு இருந்தனவாம்.[1]

கடவுள் வாழ்த்து

சேகனாப் புலவர் சீறாவைப் பதிப்பித்ததோடு நில்லாது “திருவாய் உருவாய்” எனத் தொடங்கும் சீறாப்

  1. முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், பக், 117–118

25