பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


உமறுப் புலவர் பாடி இருப்பதை இங்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இறைவனும் வானவர்களும் மட்டுமின்றி நபி பெருமாளார் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர், மனிதப் படைப்பு அனைத்திலும் மிக மேலானவர் என்பதை உணர்ந்த இயற்கையும் மிருக இனங்களும், தாவரங்களும் அவர்களுக்குப் பணிந்து சலாம் உரைத்தன என்பதை ஆங்காங்கே பல பாடல்களில் உமறுப் புலவர் பாடியுள்ளார்.

நபி பெருமானார் (சல்) அவர்களின் வரலாற்றினைப் பாடி வரும்போது, அவர்களுக்கு நபிப்பட்டம் வரும்வரை உமறுப்புலவர் இஸ்லாமிய மரபுகளை மிகுதியான அளவில் கையாளவில்லை. அது தான் இயற்கையும் கூட. நபி பெருமானாருக்கும் கதீஜா நாயகி அவர்களுக்கும் இடையே நடைபெற்ற திருமணம் பற்றி வர்ணிக்கும் "மணம்புரி படல"த் தையும் "பாத்திமா திருமணப் படல"த்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலனாகும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று விதி முறைகளை வகுத்தளித்துள்ளது இஸ்லாம். ஒரு முஸ்லிமின் வாழ்வில் மார்க்கச் சட்ட திட்டங்கள் ஆட்சி செலுத்தாத எந்தப் பகுதியும் இல்லை என்றே கூறலாம். எனவே தான், அப்படியல்லாத மற்றவர்களின் வாழ்க்கை முறைகளிலே காணப்படாத, தனித்தன்மை பொருந்திய இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களின் அடிப்படையில் அமைந்தவையான பல மரபுகள் இஸ்லாமியரின் வாழ்விலே காணப்படுகின்றன.

பெரும்பாலான இஸ்லாமிய மரபுகள் அவ்வாறாக மார்க்க அடிப்படையில் அமைந்தவை என்பதனாலேயே அவற்றைச் சுட்டும் சொற்களும் கூட மிகுதியாக அரபி மொழிச் சொற்களாவே உள்ளன. அப்படிப்பட்ட இஸ்லா மிய மரபுகள் உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்களுக்குப் பொதுவானவை. அவைகளுள் மிகப்பல சீறாப்புராணம் முழுவதுமே ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன.