பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமறு தரும் உவமை இன்பம்


பேராசிரியர் சி. நயினார் முகம்மது, எம். ஏ;


முன்னுரை

'அழகே அழியா இன்பம்’ என்பர். அழகுணர்ச்சி இலக்கியக் கலைச்கு இன்றியமையாதது. கவிதைப் பெண்ணுக்குக் கவினைத் தருவது அணியாகும். அணி எனும் சொல் ஆபரணம் எனும் பொருளுடன் அழகு எனும் பொருளையும் தரும், எனவேதான் அழகுத் தமிழுக்குரிய ஐந்து இலக்கணங்களில் அணியிலக்கணமும் ஒன்றாக அமைந்துள்ளது. தண்டி யலங்காரமும், மாறன் அலங்காரமும் குவலயானந்தமும் அணிகளின் வகைளை விரித்துக் கூறுகின்றன. இவற்றுள் தலையாயதும் நிலையாயதும் உவமையணியாகும். சொல்லணிகளையும் பொருளணிகள் பலவற்றையும் கவிதைக்குச் சுமையாவன என்று ஒதுக்குவாரும் உவமையை உவந்து போற்றுவர். ஒல்காப் பெருன்மத் தொல்காபபியரும் உவமைக்கே ஓரியல் வகுத்துள்ளார். உவமை பொருளுக்குத் தெளிவும் பொலிவும் வலிவும் தந்து களிப்பூட்டுகின்றது.

"உவமை என்னும் தகலரும் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய அரங்கில் கவினுறத் தோன்றி
நீப்பரு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே"

எனச் சித்திர மீமாம்சை சித்தரிக்கின்றது.

"வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகை பெற வந்த உவமைத் தோற்றம்." [1]

  1. 1. தொல்காப்பியம் சூத்திரம் 272.