பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404


நாயகமவர்கள் இன்னார் இனியரென்று பாராமல் எல்லார்க்கும் இனியவை காட்டி இன்பம் செய்தார்கள். பொருளாலும் பணியாலும் அருளுணர்ச்சியாலும் அனைவர்க்கும் கைம்மாறு கருதாமல் உதவியுள்ளார்கள். கார்முகிலும் வேறுபாடின்றி எதையும் எதிர்பாராமல் மழை பொழிந்து வளம் சுரக்கின்றது.

மழையின்றி மாநிலம் செழிக்காது; கருணை நபியின் நெறியின்றி நானிலத்தில் நலம் பிறக்காது.

நபிகள் நாயகம் இறைவனிடத்திலிருந்தே அருளுரைகளையும் நெறிமுறைகளையும் விதிவிலக்குகளையும் பெற்று வையத்திற்கு வழங்கியுள்ளார்கள். வெண்மேகமும் கடலிடத்து முகந்து வந்து கன மழை பொழிந்து களிப்பூட்டுகின்றது. இவ்வாறு உவமானத்தால் உவமேயம் சிறப்பதும் உவமேயத்தால் உவமானம் சிறப்பதும் கவிஞர் திறத்தால் அமைகின்றன சிறந்த அடை மொழிகளால் உயர்ந்த பொருட்கள் தோன்றி விடுகின்றன. பொதுவாக இயற்கை பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் மக்களுக்கும் மக்கள் செயல்களுக்கும் உவமை காட்டுவது பொது நியதியாகும். இங்கு இயற்கைப் பொருளாகிய மழை முகிலுக்கு காப்பிய நாயகராகிய மாதபியையே உவமை காட்டுகிறார் இவ்வாறு அமைவது பொருளுவமையாகும்.

உவமையில்லாத செல்வி

காப்பியத் தலைவர் தம் பெற்றோர்களின் சிறப்பியல்புகளைத் தீட்டிக் காட்டுவதிலும் இனிய உவமைகளையும் உருவகங்களையும் எடுத்தாளுகின்றார்,

"அயிலுறை செழுங்கரத்து அப்துல்லா எனும்
பெயரிய களிறுக்கோர் பிடியும் போல் அவர்
உயிரென இருந்தசைந்த ஒசிந்த பூங்கொடி
மயிலெனும் அமினா என்னும் மங்கையே." [1]

  1. 1. சீறா , நபியவதாரப் படலம் 9