பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414


உவமைகள் பண்பாட்டுச் சிறப்பையும், அறிவியல் கருத்துக்களையும் தத்துவ நுட்பங்ளையும் நீதி நெறிமுறைகளையும் உணர்த்துவதுண்டு. ஷாம் நகர் செல்லும் வழியில் விரிந்துள்ள இயற்கைக் காட்சிகளைத் தீட்டிக் காட்டும் போது பண்பாட்டுச் சிறப்பைப் புலப்படுத்தும் இனிய உவ மைகளைக் கண் மகிழ்கின்றோம்.

பாவையும் பயிரும்

நாற்றங்காலில் பாவியுள்ள நெல்நாற்றைப் பறித்து விளைநிலத்தில் நட்டுள்ளனர். பயிர் செழித்துக் கிளைத்து வளர்கிறது; கதிரீன்று பால் பிடித்து மணிமுதிர்ந்து தலை சாய்த்து வரப்புகளில் படிந்துள்ளது. இக்காட்சியில் குலப் பெண்ணின் நலச்சிறப்புப் புலப்படுகின்றது புலவருக்கு. அதனையே உவமையாகத் தீட்டிவிடுகின்றார். பிறந்தகத்தில் வளர்ந்து பருவமெய்திய பெண் கடிமணம் புரிந்து கணவனகம் புகுந்து இல்லறம் நடத்தி இன்பச் சின்னமாகிய குழந்தையை ஈன்று பணிந்து பயன் தந்து வாழும் பாங்கு நிலந் பெயர்ந்து விளைந்து படிந்து பயணிக்கும் நெற்பயிருக்கு உவமை காட்டப்பட்டுள்ளது. எத்தனை அற்புதமான பண் பாட்டுப் படைப்பு,

"ஒருமனைப் பிறந்து ஒருமனை இடத்தினில் உறைந்து
கருவரத் தரித்து ஈன்றுதன் கணவனை இகழாப்
பெருவரம் புறும் பெண்கொடி எனத்தலை சாய்த்துத்
திருவும் செல்வமும் திகழ்தரக் காண்பன செந்நெல்" [1]

கணவனுக்குக் கட்டுப்பட்டு இன்பம் பயந்து பிள்ளைக் கனியமுதைப் பெற்றெடுத்து எல்லை கடக்காமல் கற்புக்கடம் பூண்டு பணிபுரிந்து வாழும் குடும்பப் பெண்ணைச் செந்நெற் பயிரில் கண்டு களிக்கின்றோம்.

  1. 1. சீறா. ஷாம் நகர் புக்க படலம்11