பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

நாயகி பாவம் என்ற நெறி உண்டு. 'இந்த பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப்பக்கத்தின் மீது நடப்பதைப் போன்ற கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது. அதற்கு இப்புறம் அப்புறம் போய்விட்டால் அசந்தர்ப்பம் ஆகிவிடும்' என்று திறனாய்வாளர்கள் கூறுவார்கள்.

உமறுப்புலவருக்கு இத்தகைய சோதனைதான் ஏற்பட்டிருக்கிறது. கத்தி முனையில் நின்றே அவர் சீறாக்காவியத்தைப் பாடியிருக்கிறார் என்று சொல்லலாம். அவர் பாட வந்தது தமிழ்க் காப்பியம். அதிலும் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம், உமறு கம்பராமாயணக் கடலில் ஊறியவர்; சிந்தாமணிச் சாகரத்திலும் நீந்தியவர். அந்தப் பயிற்சியின் காரணமாக ஒரு பார காவியத்தை எழுதி முடிப்பது அவரால் இயலக்கூடிய செயலேயாகும் ஆனால் இஸ்லாமிய நெறி முறைகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டு காவியத்தைப் படைக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது, காவியத் தலைவர் முகம்மது நபி இறைவனின் இறுதித் துரதர். இஸ்லாமிய நெறியைப் புரக்க வந்த செம்மல், எனவே, கற்பனையாகவோ, புனைந்துரையாகவோ காவியப் புலவர் வலிந்து எதையும் சொல்ல முடியாது.

'கலைமறை முகம்மதென்னும் காரணம் இல்லையாகில் உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடுக்கணம் சுவர்க்கம் மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை நிலையுறப் படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே' என்று போற்றப்படுவர் காவிநாயகர் முகம்மது. இத்தகைய தலைவரை தம் விருப்பம்போல் உமறுப் புலவர் பாட முடியாது. எனினும் காவிய நெறியைத் தழுவி நாற்பொருளை, சிறப்பாக இன்பச் சுவையைப் பாடியே யாகவேண்டும். இன்பச் செய்திகள் இல்லாவிட்டால் வெறும் அறநூலாக வல்லவா அமைந்து விடும்? என்ன செய்வார் உமறு?

நாயகரைப் போலவே அவருடன் தொடர்புடைய மாதர் திலகங்களும் மாண்புக்குரியவர்கள். தாயார் ஆமினா,