பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


'அறத்தினுக்கு இல்லிடம், அருட்கோர் தாயகம், சிறப்பினுக்குவமையில்லாத செல்வி' யென்று புலவர் போற்றும் புகழ் பெற்றவர். மனைவி கதீஜா நாயகி 'பேரழகொழுகும் பெண்ணலங்கனி, பிரசமூரிய மொழிக் கரும்பு, ஆரணக் கடலுக்கு அமுதநாயகி' என்று போற்றப்படுபவர். மகளார் பாத்திமா நாயகியும் அப்படியே! புனிதமான இவர்களைப் பற்றி புனைந்துரை கற்பிக்கமுடியுமா! "எச்சரிக்கை! நீர் பாடுவது நபிகள் நாயகத்தின் வரலாறு, கத்தியின் கூர்ப் யக்கத்தில் நிற்பதை மறந்து விடாதீர்கள். எண்ணம் போல் இயற்றுவதற்கு உமக்கு அனுமதி இல்லை. எல்லைக்கோட்டுக்குள் நின்றே நீர் பாடவேண்டும்!" என்ற உள்ளொலி, மனக்குரல், உமறுவினுள்ளே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

தொடக்கத்திலேயே புலவருக்கு வரம்பும் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுவிடுகின்றன. இந்தக் கட்டுப்பாட்டை ஒரு சவாலாக, அறை கூவலாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

காவிய நாயகரும் நாயகியும் சந்திக்க வேண்டும் அவர்களிடையே நேசம் அரும்ப வேண்டும். தலைவர் முகம்மதுவைப் பற்றி ஒரு கனவு காண்கிறார் கதீஜா நாயகி. பெருமானார் ஊர்வலம் வருகிறார். குதிரைகள் வரிசையாகத் தொடர்ந்து வருகின்றன. வானவர்கள் வாசனைப் பொருட் களைத் தூவிக்கொண்டே வருகின்றனர். நாயகர் பவனி வருவதைப் பார்த்துக் கண்ணும் கருத்தும் களித்துப் போகிறார் கதீஜா நாயகி.

இந்தக் கனவுக்குப் பிறகு அவர் மனத்தில் அண்ணலாரைப் பற்றிய எண்ணங்கள் இடம்பெற்றுவிடுகின்றன. அடுத்து சந்திப்புக்குக் களம் அமைக்கப்படுகிறது. உமறு அதை எப்படிப் பாடுவாரோ என்று ஆர்வத் துடிப்போடு பார்க்கிறோம்.

நபிகள் திலகம் நாயகியாரின் இல்லத்திற்கு வாணிகம் பற்றிப் பேச வருகிறார். அவர் முகம் பேரொளி மிக்கது. வெள்ளம்போல் அங்கே பேரழகு பொலிந்து கொண்டிருக்