பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53



நபிகளாரின் திருச்செல்வி பாத்திமா நாயகிக்கும் மாவீரர் அலிக்கும் திருமணம். மணமகன் உலா வருகிறார். வீதியின் இருமருங்கிலும் 'மதிக்குலம் சடல் பூத்தது போல், மங்கையர் திரண்டு நிற்கின்றனர். பேதை இருக்கிறாள். பெதும்மை இருக்கிறாள். மங்கைப் பருவப் பெண் உண்டு. மடந்தையும் நிற்கிறாள். அரிவை இருக்கிறாள் தெரிவை இருக்கிறாள். பேரிளம் பெண்டிரும் உலாவைக் காண்கின்றனர். அவர் களின் எண்ணமெல்லாம் வீரர் அலியாரின் மீது தான். அவருடைய பெருகிய அழகெல்லாம் ஒருத்திக்கே சொந்தமாகப் போகிறதே என்று அவர்கள் பொறாமையால் ஏங்குகிறார்கள். பாத்திமா நாயகியின் திருமணப் படலத்தில் இரு நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எண்ணம்போல் அமைத்து இன்பச் சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் புலவர். இப்படி, வாய்க்கும் போதெல்லாம் வடிகாலை வகுத்துக் கொண்டிருக்கிறார் அவர். காவியத்தின் பெருமைக்கு எவ்வகையிலும் குறை ஏற்படுத்தாத வகையில் களங்களை அமைத்திருப்பது உமறுவின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

உமறுப்புலவர் உலகியல் அறிந்த மேதை. அவர் சார்ந்த சமயம் இஸ்லாமாக இருப்பினும் தாயகத்தில் மற்ற சமய நெறி முறைகளையெல்லாம் முற்றாக உணர்ந்தவர். இஸ்லாமிய சமய தத்துவங்களையும் நெறிமுறைகளையும் காவியத்தில் சொல்வதோடு நின்று விடாமல் சமயம் வாய்க்கும் போதெல்லாம் பொதுவான கருத்துகளையும் குறிப்பிட்டுச் சொல்கிறார், மேரு மலையையும், ஆதிசேடனையும், லட்சுமியையும் காளியையும் கூட இஸ்லாமியத் தமிழ்க் காவியத்தில் இடம் பெறச் செய்கிறார் என்றால் வியப்பில் நாம் புருவத்தை உயர்த்துகிறோம்.

அண்ணல் நபி பிறந்த அரேபியாவுக்கும் செல்வத்துக்கரசியாக புராணங்கள் போற்றும் திருமகள் லட்சுமிக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும? இந்துப் பெருமக்கள் கொண்டாடும் தெய்வமல்லவா அவள் என்று வினவலாம். உமறுப்புலவரின் நோக்கும் போக்கும் அப்படிப்பட்டதல்ல. இலடசுமியை அவர் இறைவியாக எண்ணிப் பாடவில்லை.