பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


மேலும் நபிநாயகம் அவர்களை 'தருங்கொடை நயினார் என்று கொடைவள்ளலாகக் கூறுகிறார். மழையைப்போல் அவர் கொடை வழங்கினார் என்றுமேலும் சில இடங்களிலும் கூறுகிறார். 'மங்குலங் கவிகை வள்ளல்' என்றும் (சீறா பாத்திமா திருமணப் படலம் 1) எழிலி முற்றும் கரந்தாங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது" என்றும் (சீறா. உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 89) கூறுவது காண்க. முகம்மது நபி (சல்) அவர்களை வெறுங்கொடை வள்ளல் என்று கூறாமல், மேகத்தைப் போன்ற கொடை வள்ளல் என்று உமறுப்புலவர் கூறுவதற்கு உட்பொருள் ஒன்று இருப்பது போலத் தோன்றுகிறது. ஏழை எளியவருக்குப் பொருள் கொடுத்து உதவினார் என்று கூறுவதாகத் தோன்றவில்லை. இதற்கும் அப்பாற்பட்ட வேறுபொருள் இருக்கிறதென்று தோன்றுகிறது, மேகம் மழையைப் பொழிந்து மக்களுக்கு வாழ்க்கையைத் தருகிறது. மழை பொழியும் மேகத்துக்கு மனிதர் யாரும் கைம்மாறு செய்ய முடியாது. மேகமும் கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை, நபிநாயகம் அவர்கள் ஆண்டவன் அருளினால் கிடைத்தற்கு அரிய வீட்டு நெறியைக் கைவரப் பெற்றார். அவர் அந்த அருள் தெறியைத் தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கிணங்க, 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' ஆக உலக மக்களுக்கும் வழங் கினார். எந்தப் பிரதிபலனையும் கருதாமல் அவர் தாம் கண்டு கைவரப் பெற்ற அரும் பெறற் கொள்கையை (இஸ்லாம் மார்க்கத்தை) உலக மக்களுக்கு வழங்கின படியால் அது அவர் வழங்கின அருட்கொடை என்று உமறுப்புலவர் கருதினார். ஆகவே தான் நபிநாயகத்தை 'மங்குலங் கவிகை வள்ளல்', 'எழிலி முற்றும் கரந்தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது' என்றும் கூறினார் என்று தோன்றுகிறது.

தமிழ்ப் புலவர் இயற்றும் நூல்களில் அவையடக்கம் கூறுவது மரபு. அந்த மரபுப்படியே உமறுப் புலவரும் தம்முடைய காவியத்தில் அவையடக்கம் கூறியுள்ளார். கற்றறிந்த பெரும் புலவர்க்கு முன்னிருந்து தாம் கவிபாடுவது