பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


செந்நாய் முதலிய விலங்கினங்கள் குளிரால் நடுங்குகின்றன. நீர்ப்பெருக்கு குறிஞ்சி நிலத்திலுள்ள வேங்கை, சண்பகம். நெல்லி, அசோகு, ஆசினி, குங்குமம், நாரத்தை மரங்களை வேரோடு சாய்த்துத் தள்ளுகிறது, மலைவாழ் குறவர்களின் குடிசைகளையும் தினையையும் வாரிச் சுருட்டி உருட்டுகிறது. மலையரசனைத் தழுவி அவன் செல்வங்களைச் சுருட்டிக் கொண்டு நழுவுகின்ற விலைமகள் போல மலையிடத்துள்ள சந்தனம், முத்து, தந்தம் முதலிய உயர்ந்த பொருள்களை வாரிக் கொண்டு அருவியாக இழிகிறது. குறிஞ்சி நிலத்தைக் கடந்து செல்லும் வெள்ளம் பாலை நிலத்தில் புகுந்து வேடர்குல மங்கையரும் சிறாரும் வயிற்றிலடித்துக் கொண்டு ஓடும் வண்ணம் வெருட்டுகிறது. முல்லை நிலத்தையும் அவ்வெள்ளம் விட்டபாடில்லை. ஆயர்மகளிர் வைத்திருந்த பால், தயிர், நெய் அவை வைக்கப்பட்டிருந்த பாண்டங்கள், மகளிர் புடவைகள், ஆயர் ஊதும் புல்லாங் குழல்கள், பாய் படுக்கைகள் முதலியவற்றைக் கவர்ந்து கொண்டு ஆட்டின் கூட்டமும், கன்றுக் குட்டிகளும் சிதறியோடும்படி யாகப் பாய்ந்து செல்லுகிறது இவ் வெள்ளம் மருத நிலத்தை மட்டும் விட்டுவிடுமா? வாய்க்கால் வயல்கள், குளங் குட்டைகள், தடாகங்களெல்லாம் நீரால் நிறை கின்றன. அங்கிருக்கும் அன்னங்கள் அஞ்சிப் பறக்கின்றன. உழவரும் உழத்தியரும் வெள்ளத்தைக் கண்டு மகிழ்கின்றனர். பாவம்! அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஏரி குளங்களை உடைத்துக கொண்டு வெள்ளம் சேரியிலும் கொல்லைகளிலும் புகுந்து பலா மரங்களையும் ஒருங்கே சாய்க்கிறது. சேரி வாழ்நர் கள்ளுண்டு, ஒனறு கூடி, அணைகளில் நீரைத் தேக்கி, வயல்களை வெட்டி, ஏருழுது, நாற்று விட்டு, நடவு நட்டு, பயிர் வளர்த்து அறுவடையும் செய்கிறார்கள். அவர்கள் அறுவடை செய்து அடித்துக் குவித்த நெல்லின் தோற்றம் எப்படி இருக்கிறது தெரியுமா?

"இசைந்திட நிறைத்துக் குவித்த நெற்போர்கள்
எங்ஙணும் இலங்கிய தோற்றம்