பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு குழந்தைகள் 23 ஆனால் அவர்களை அங்கு காணவே யில்லை.சடைபற்றிய அவ்விரு துணிப் பந்துகளும் வேகமாக ஓடி, பார்வையிலிருந்து மறைந்து விட்டன. "போயே போய் விட்டன. குட்டிப் பிசாசுகள்" என்று போலீஸ்காரன் சொன்னான். நல்ல தன்மையோடு புன் முறுவல் புரிந்து கொண்டே அவன் தெருவில் அப்படியும் இப்படியும் கவனித்தான். குட்டிப் பிசாசுகள் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிரித்துக் கொண்டே ஓடின. காட்காவின் பாதம் துணிக் கிழிசலில் சிக்கி விட அவள் அடிக்கடி கீழே விழுந்து கொண்டிருந்தாள். "கடவுளே! மறுபடியும் விழுந்து விட்டேன்!" என்று அவள்,எழுந்து நிற்க முயற்சிக்கும் வேளையிலேயே. சொல்லிக் கொள்வாள். பயத்தோடு திரும்பித் திரும்பிப் பார்ப்பாள். தன்னையும் மீறிச் சிரிப்பாள். "அவன் எங்கே வருகிறான்?" என்பாள். மிஷ்கா சிரிப்பு தாங்காமல் தன் விலாப்புறங்களைப் பிடித்தபடி, போவார் வருவார் மீது இடித்து மோதிக் கொண்டிருந்தான். அந்தக் குற்றத்திற்காக அவன் வாங்கிக் கட்டிக்கொண்ட அடிகளுக்கும் குறைவு கிடையாது. "ஏய் நிறுத்து... உன்னைப் பிசாசு விழுங்கட்டும்... அவளைப் பாரேன் ! ஏ அப்பாவி,ஏய்! ஹுய்,அதோ மறுபடியும் ஆரம்பித்து விட்டாளே.இப்படிச் சிரிக்க அதில் ஏதாவது வேடிக்கை இருந்ததா என்ன?" காட்கா விழுந்து விழுந்து எழுந்தது அவனுக்கு அதிக உற்சாகம் அளித்திருந்தது. "இனிமேல் அவன் நம்மைப் பிடிக்க முடியாது. நாம் மெதுவாகப் போகலாம். இன்னொருவன் இருந்தானே,