பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 ஆர்லோவ் தம்பதிகள் நேராகப் பார்த்துக்கொண்டே அர்த்தம் நிறைந்த சிரிப்பு சிரித்து, அவனுடைய கோபத்தீயை விசிறி விட்டாள். அவன் தன்னிலை இழந்தான்; அவளை அறைந்தான்; இரக்கம் சிறிதுமின்றி அடித்தான். பிறகு இரவு நேரத்தில், அவள் மகா மோசமாகக் காயம் பட்டும் மனம் முறிந்தும் படுக்கையில் அவன் பக்கத்தில் கிடந்து முனங்குகிற போது, அவன் தனது கடைக்கண்ணால் அவளைக் கவனித்து ஆழ்ந்த பெரு மூச்செறிந்தான். அவன் துயரமுற்று தன் மீதே வெறுப்பு கொண்டான். அவனது மனச்சாட்சி அவனுக்கு வேதனே தந்தது. ஏனெனில், அவன் பொறாமைப் படுவதற்கு அவசியமே கிடையாது; எவ்விதக் காரணமும் இல்லாமலே அவன் அவளை அடித்து விட்டான் என்பதை அவனே அறிந்தான். "சரி சரி. அவ்வளவு போதும். என் பேரில்தான் குற்றம் என்று நினேக்கிறேன். ஆனால் நீயும் நல்ல ஆள்தான். என்னைக் குத்திக் குத்திக் கோப மூட்டியதைத் தவிர நீ ஏன் வேறு எதுவும் சொல்லவில்லை? நீ ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?” என்று அவன் கஷ்டத்தோடு சொன்னான். அவள் பதில் பேசவில்லை. ஏன் என்று அவள் அறிவாள். இப்பொழுது, காயம் பட்டு ரத்தம் வடித்துக் கொண்டு தான் கிடக்கும் நிலேயிலே, அவனுடைய அன்புத் தழுவுதல்கள்-இராசியாகப் போவதற்காக அவன் காட்டும் மென்மையும் உணர்ச்சிப் பெருக்கமும் கலந்த கொஞ்சுதல்கள் - தனக்குக் கிடைக்கும் என்பதை அவள் அறிவாள். அதற்காக மட்டிலுமே அவள் தனது வாழ்வின் ஒவ்வொரு நாளும் அடிபட்டு நொறுங்கிய உடலின் வேதனையைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருந்தாள்.