பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ஆர்லோவ் தம்பதிகள் அது முன்வரப் போவதில்லை. அந்த மாணவர் வந்தாரே, அவர் தொல்லை கொடுப்பவர் தான். அது யாருக்கும் புரிந்து விடும். ஆனால் அவர் செய்கைகளின் நோக்கம் மற்றவர்களுக்கு உயர்வு அளிப்பது தான். மக்களைக் கொல்கிற விஷயத்தில்-பணத்துக்காகவோ அல்லது ஆசைக்காகவோ அதைச் செய்யும்படி அவரை இணங்க வைக்க முடியாது. அப்படிப்பட்ட காரியம் எதையும் செய்ய மாட்டார் என்பதை அவர் முகத்தைப் பார்த்ததுமே சொல்லிவிட முடியாதா என்ன? அதற்கு வேண்டிய மூஞ்சி அவரிடம் இல்லை.” அன்று முழுவதும் அந்த மாணவனைப் பற்றியும், அவன் சொன்ன விஷயங்களைப் பற்றியுமே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் முகத்தையும், அவன் சிரித்த விதத்தையும் நினைத்துப் பார்த்தார்கள். அவனது மேற்சட்டையில் ஒரு பொத்தான் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு அப்பொழுது தோன்றியது. சட்டையின் எந்தப் பக்கத்துப் பொத்தான் தவறிப் போயிருந்தது என்ற விஷயம் பற்றி அவர்களுக்குள் சண்டையே வந்துவிடும் போலிருந்தது. வலது புறத்தில் உள்ளதுதான் என்று மேட்ரோனு திடமாகச் சொன்னாள். அவள் கணவனே இடது பக்கத்துப் பொத்தான் என்று சொல்லி, அவளை இரண்டு தடவைகள் மனமார வசைபாடித் தீர்த்தான். ஆனால், அவள் தனக்கு மது ஊற்றிக் கொடுத்த போது புட்டி முழுவதையும் காலி செய்து விடவில்லை எனும் விஷயம் நினைவில் உறைக்கவும், அவன் அவளுக்கு விட்டுக் கொடுத்தான். மறு நாள் அங்த அறையைச் சுத்தப்படுத்தி விடுவது என்று அவர்கள் தீர்மானித்தார்கள். உடனேயே சுத்தமான காற்றைப்போல தங்களை நாடி வந்த புதிய அனுபவம் தந்த உற்சாக மிகுதியினால், அவர்கள் மீண்டும் அந்த மாணவனைப்பற்றிப் பேசத்தொடங்கிவிட்டார்கள்.