பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடை கூறியதால், தன் விடுகதைக்கு மனிதன் ஒருவன் விடையளித்து விட்டானே என்ற வருத்தத்தால் அவ்விலங்கு உயிரை விட்டுவிட்டதாம். கிரேக்கப் பெருங்கவிஞர் ஹோமர், தாம் ஒரு விடுகதையை விடுவிக்க முடியாததற்காக நாணமுற்று உயிர் துறந்தார் எனக் கூறப்படுகிறது. எனவே, விடுகதைகள் முற்றிலும் குழந்தைகட்காகவே உரிய இலக்கிய வகை எனக் கூறமுடியாது.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டளவில் ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களையும், அதிவீரராம பாண்டியன் வெற்றிவேற்கை எனும் நூலையும் பாடியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய உலகநாதர் உலக நீதியைப் பாடினார். இவை குழந்தைகட்குக் கற்பித்து வரப்படுகின்றன என்றாலும், இன்று நாம் கண்டுவரும் குழந்தை இலக்கிய வகையில் இவை அடங்குமெனக் கூறுதற்கில்லை.

குழந்தை இலக்கியத் தோற்றம்

குழந்தைகட்கே உரிய, குழந்தைகள் பாடியும் ஆடியும் பயன்கொள்ளத்தக்க கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எழுந்தன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் கி.பி. 1901-இல் குழந்தைகட்கெனத் தனித்த கவிதைகளை எழுதினார். அவர் ஆசிரியராயிருந்ததால், மேனாட்டில் இருந்தது போன்ற தனித்த குழந்தைக் கவிதைகள் தமிழில் இல்லையென்ற குறையை உணர்ந்து, அக்குறை நீங்கும் வண்ணம் அருமையான பாடல்களை இயற்றினார்.

iv