பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


தினார். அடிக்கடி அதனை வீதிக்கு எடுத்து வந்து மக்கள் பார்வைக்கு வைப்பார்.

ஒரு கோடை நாளில் அதனைக் குளிப்பாட்டவேண்டியதாயிற்று. பறவையின் ஆண்டை வேலைக்காரச் சிறுவனிடம், “கவனமாக அதனை நீராட்டு; நீராட்டும் போது ஒரு தூவல் உதிர்ந்தாலும் அதற்கு ஈடாக நீ உன் கால்களை ஒன்றைத் தர வேண்டும். கவனம்; கவனம்” என்று எச்சரித்தார். அவ்வாறே பறவையைக் கவனத்தோடு நீராட்டிக் கொண்டிருந்தான் சிறுவன். அந்த வேளையில் வீட்டுக்கார அம்மா வேறொரு பணியைத் தனக்காகச் செய்ய ஆணையிட்டாள். சிறுவனோ “என்னால் பறவையை விட்டு ஒரு கணம் கூட விலக முடியாது, ஒரு தூவல் உதிர்ந்தாலும் நான் என் காலை இழந்து விடுவேன்” என்று மறுமொழி பகர்ந்தான்.

இந்த மொழிகளைக் கேட்டு வீட்டுக்காரி சினத்தில் கொதித்தாள். சீறிப் பாய்ந்தாள். பறவையின் தூவல்கள் அனைத்தையும் பிய்த்து எறிந்தாள்.

சற்று நேரத்தில் ஆண்டை வந்தான். பறவையின் அலங்கோலத்தைக் கண்டு ஆத்திரம் மேலிட “என் இனிய பறவையின் இறகுகளைப் பிய்த்தெறிந்தது யார்?” என்று ஆவேசத்தோடு கேட்டான்.

சிறுவன் அஞ்சி வாயடைத்து நின்றான். வீட்டுக்காரி உறுமினாள் “நான் தான்” என்றாள். ஆண்டை மெல்லிய குரலில் “பிடுங்குதல் சற்றுக் கடினமான வேலைதான். தூவலில்லாதது பறவைக்குக் குளிர்ச்சியாக இருக்கும் நல்லது, நல்லது. நீராட்டுவதினும் இது சிறந்தது தான்” என்று பக்க வாத்தியம் இசைத்தான் ஆண்டை.