பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


உன்னிடம் வந்து ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்று கேட்டால் முற்றிலும் ‘உண்டு’ என்றோ ‘இல்லை’ என்றோ விடை சொல்லக்கூடாது. கொஞ்சம் உண்டு; கொஞ்சம் இல்லை என்று பதில் தரவேண்டும்” என்றார். தந்தை சொன்னதை மனத்திலிருத்திக் கொண்டான் மகன்.

சில நாள்களுக்குப்பின் யாரோ ஒருவர் வந்து “உன் தந்தை இருக்கிறாரா?” என்று கேட்டபோது “கொஞ்சம் இருக்கிறார்; கொஞ்சம் இல்லை” என்றான் தந்தை சொல் தட்டாத தனயன். என்னே அவனின் பதில் சொல்லும் பாங்கு.

74. இறப்பை வெல்லும் மூலிகை

“என்னைக் குணமாக்கும் திறமையான மருத்துவர் எவரேனும் இருப்பின் அவருக்கு இறப்பினையே வெல்லும் மூலிகை ஒன்றினை நன்றிக் கடனாகக் கொடுப்பேன். எனது மூலிகை ஒருவனைப் பலநூறு ஆண்டுகள் வாழ வைக்கும் என்று சொல்லி மருத்துவர் ஒருவரை அழைத்து வாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார் சாவுப் படுக்கையிலிருந்த மருத்துவர் ஒருவர்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் “ஏன்? அப்படிபட்ட அற்புத மூலிகையிருப்பின் இவரே அதனைப் பயன்படுத்தித் தம்மைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டார்.

இறக்கப்போகும் சாவுப்படுக்கையில் இருந்த மருத்துவர் சொன்னார், “ஒரு நல்ல மருத்துவன் தனக்குத் தானே மருந்து கொடுத்துக் கொள்ளமாட்டான்” என்று.