பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

அகப்பொருள் துறைகள் பலவற்றில் வெறி விலக்கு என்பது ஒன்று. வெறியாடுவதை விலக்குவது என்பது அதன் பொருள். களவுக் காதலில் ஈடுபட்டுத் தலைவனும் தலைவியும் அளவளாவுகிறார்கள். சில காலம் தலைவன் வந்து சந்திக்க முடிவதில்லை. அதனாலும், களவுக் காதல் வெளியாகிவிடப் போகிறதே என்ற அச்சத்தாலும் தலைவி வருந்துகிறாள். அவள் உடல் மெலிவடைகிறது. அதைக் கண்ட அவளுடைய செவிலித்தாயும் பெற்ற தாயாகிய நற்றாயும் கவலையுற்று, இது தெய்வக் குற்றமாக இருக்குமோ? என்று அஞ்சிப் பூசாரியை அழைத்துப் பூசை போடச் செய்கிறார்கள்; ஆட்டைப் பவி கொடுக்கச் செய்கிறார்கள். அதுதான் வெறியாட்டு.

தலைவியினுடைய உயிர்த்தோழி இதைக் கண்டு வருந்துகிறாள். இவர்கள் உண்மையை உணராமல் இவ்வாறு செய்கிறார்களே! என்று வருந்தி, இப்போது நாம் இவர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். இதுதான் தக்க தருணம் என்று குறிப்பாகத் தலைவி ஒரு தலைவனிடம் காதல் பூண்டிருப்பதைச் சொல்கிறாள்.