பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

முன்னுரை

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு' என்றார் மகாகவி பாரதியார். நமது நெஞ்சங்களை மட்டுமல்லாமல், பிற நாட்டு நல்லறிஞர் நெஞ்சங்களையும் அள்ளும் ஆற்றல் பெற்றது அருமைச் சிலப்பதிகாரக் காப்பியம். இனிமேல் அத்தகைய மாமணி ஆரங்களைப் படைக்கும் அவசியமும், ஆற்றலும் நமக்கு ஏற்படுமா என்ற கேள்விக்குரிய பதிலை, காலந்தான் கூற வேண்டும். சிலப்பதிகாரம் போன்ற பல மணி ஆரங்களை நாம் படைக்காவிட்டாலும், நம்மால் முடிந்த ஏதோ சிறுசிறு பணியாரங்களையாவது அவ்வப்போது படைப்பது நமது கடமை!

கடந்தகாலச் சிறப்பை நாள் தவறாமல் பேசிக் கொண்டிருப்பதைவிட, ஏதேனும் ஒரு புதிய பணியைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால், சிரிப்பதிகாரம் என்ற இந்தப் பணியாரத்தைச் செய்தளிக்கிறோம். நாம் செய்யும் பலகாரங்களும் பணியாரங்களும் அன்னைக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ என்றெல்லாம் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. இந்தச் சந்தேகப் பிசாசு குறுக்கே வந்தால், எந்த ஒரு இலக்கியத்தையும் நம்மால் சமைக்க முடியாது. நம் கடமையைப் பற்றின்றிச் செய்வதே நமது வேலை. பெரிய பெரிய மகா காப்பியங்களையும், சங்க இலக்கியப் படையல் களையும், தங்கக் கலைக்கனிகளையும் உண்டு மகிழ்ந்த தமிழன்னை, ஏதோ இந்த ஏழையின் காணிக்கையையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பித்தான் இந்தச் சின்னஞ் சிறு பணியாரத் தட்டினை அன்னையின் திருமுன் படைக்கிறோம்.

எத்தனையோ பெரிய நூல்களையும், சாத்திர அலங் காரங்களையும், தத்துவ அணிகளையும், காவிய மாலை களையும், கல்வெட்டு நகைகளையும், கலை மணிமேகலை களையும் போட்டுக் கொண்டு புதுயுகப் பொலிவுடன்