பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190 ————————————————————————————————————※ சிரிப்பதிகாரம்

ஐயா மனிதன்! ஒருவன் தன்னைத் தானே கோபித்துக் கொள்ளும் சமயத்தில் ஒரு வேதாந்தி ஆகி விடுகிறான். அதாவது திருந்துவதற்குத் தயாராகி விடுகிறான்" என்று உறுதியான குரலில், ஒருவருக்கும் இலேசில் புரியாத பீடிகை ஒன்றைத் தூக்கிப் போட்டார்.


“ஏன் ஐயா! இவ்வளவு ஒழுங்காகப் பேசும் நீர், ஏன் தனிமையில் சலித்துக் கொண்டு இப்படி கடலோடும், அலையோடும், பேசிக் கொண்டிருக்கிறீர்? ஒருவேளை நீர் இயற்கையோடு பேசும் ஒரு எழுத்தாளரோ?” என்று கேட்டேன் சந்தேகத்துடன்.


“இல்லை. நான் எழுத்தாளன் இல்லை. ஒரு நல்ல எழுத்தாளரைக் கொன்ற கொலைப் பாதகன் நான்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே பதில் அளித்தார் அந்த மனிதர்.


“ஏன் ஐயா! போயும் போயும் ஒரு எழுத்தாளனையா கொன்றீர்! அவனைக் கொல்ல வேறொருவரும் தேவை இல்லையே! எழுத்தாளன் என்பவன் தானாகவே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகும் ஒரு வினோதப் பிராணி ஆயிற்றே!” என்றேன் அனுதாபத்துடன்.


“ஆமாம், ஆமாம். நீர் சொல்வது முழுவதும் உண்மை. அந்த எழுத்தாளரை என் கையால் கொல்லவில்லை. எல்லாக் கவிகளையும் போல, அவராகத்தான் காலமானார். ஆனால் அவர் இறப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன். எழுத்தாளர் மட்டும் அல்ல. இன்னும்..” என்று மேலும் இழுத்தார்.


“என்ன ஐயா! ‘எழுத்தாளர் மட்டும் அல்ல, இன்னும்.’ என்று இழுக்கிறீர்! இன்னும் யார் யாரை ஐயா கொன்றீர்?” என்று பயத்துடன் கேட்டேன்.


“சொல்லுகிறேன் சார் எழுத்தாளர், டைரக்டர், கதாநாயகன் இந்த மூன்று பேர் மரணத்துக்குமே நான் தான் முக்கியமான காரண பூதமாக இருந்தேன்” என்று அங்கலாய்த்தார். அந்த மனிதர்.