பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

சிரிப்பதிகாரம்




எழுத்தாளரோ, எதற்கும் அசையாத் இலட்சியவாதி. என்னிடமே நேரிடையாக எதிர்த்துப் பேசினார்!

“சார் கதை நான் பெற்ற குழந்தை. அதை நானே சாகடிக்க மாட்டேன். உலகில் ஒன்றை ஆக்கவே நமக்கு உரிமை அழிக்க அல்ல!” .

“மேலும் சினிமா உலகத்தைப்பற்றி உங்களுக்கு என்ன ஐயா தெரியும்?” என்று என் மண்டையில் அடிப்பது போல் ஒரு கேள்வி கேட்டார். அத்துடன் அவர் நிற்கவில்லை. “சிந்தனையிலே அறிவை ஆவியாக்கி முடிவு செய்யும் எங்கள் உள்ளம்தான் உலகம்! குழி விழுந்த எங்கள் கண்கள்தான் காலத்தின் கண்ணாடி, எங்கள் பேச்சுத்தான் மக்களின் குரல். எங்கள் எழுத்துத்தான் சமுதாயத்தின் சட்டம். உம்மிடம் பணமிருக்கலாம். அது எங்கள் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, எங்களை அடிமைப் படுத்திவிட முடியாது. போம்! உமக்குக் கெட்ட காலம் ஆரம்பமாகி விட்டது. ஆகையால் தான் மன மலடியான கதாநாயகியின் திருவடியில் வீழ்ந்து விட்டீர். உங்கள் அபிப்ராயப்படி கதைக் குழந்தையைக் கொல்லுங்கள்! கொல்லுங்கள்! ஏதேதோ உளறுகிறீர்! கதையை மாற்ற முடியாது. நான் போகிறேன் பாக்கிப் பணத்தை அனுப்பி விடும்” என்று வெறி பிடித்தவர் போல் கூறிவிட்டு வெளி யேறி விட்டார் எழுத்தாளர்.

நானும் அவரைத் துரத்தி விட்டேன். பேசியபடி பணத்தையும் கொடுக்கவில்லை. என்னை நம்பிக் குடும்பத் தோடு பட்டணத்துக்கு வந்து இராப் பகலாக உழைத்துக் கொண்டிருந்த அவர் ஏகப்பட்ட கடன் வாங்கியிருந்தார். திடீரென்று நான் விரட்டியதால், அவர் மனம் நொந்து, வியாதி வந்து, ஆஸ்பத்திரியில் அடைக்கலம் புகுந்து, அகால மரணம் அடைந்து விட்டார். சும்மா சொல்லக் கூடாது. ரொம்ப நல்ல மனிதர் அவரது அரிய நண்பர்கள் அவரை மறக்காமல் அனுதாபத் தீர்மானத்தையும் நிறைவேற்றி விட்டார்கள். அந்த எழுத்தாளருக்கு இந்த உலகத்தில் நிலையான செல்வம் அனுதாபத் தீர்மானம் ஒன்றுதான்.