பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

55


பார்த்து ஒரு கேள்வி கேட்டுவிட்டு பத்துப் பக்கம் காதலைப் பற்றி பேசிக்கொண்டே போகிறார், கவிதா சாம்ராஜ்யங்களின் சக்ரவர்த்தியான கம்பநாட்டாழ்வான், “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” இப்படி இவர்கள் சந்திப்பதற்கு முந்தி இராமனும் சீதையும் என்ன, பார்வை இழந்த குருடர்களாகவா இருந்தார்கள் இல்லை. வாக்கினைக் கடந்ததொரு தெய்விக நோக்கு இது!

தாமரை, தான் மலருமுன் மொட்டாக இருந்த தன்மை போல், இருவர் மனமும் காதல் விஷயத்தில் மொட்டாக இருந்தது. காலம் வந்ததும் மனக்கண் மலர்கிறது. மாசிலாக் காதல், ஒளிமதுக் களிப்பைக் காணுகிறது. தெய்வம் புன்னகை புரிகிறது. இராமனும் சீதையும் மாத்திரமா சிரிக்கிறார்கள். கம்பனும் நாமும் மாத்திரமா சிரிக்கிறோம். இந்த பிரபஞ் சத்தையே மலரச்செய்து, சிரிக்க வைக்கும் அமர சித்திர மல்லவா இது. மனித மனத்தை சிரிக்க வைத்து, படைப்பு நாட்டியத்தின் அலாரிப்பைத் துவக்கி வைக்கும் காதலின் சிரிப்பே நீ வாழ்க!

சிங்காரமா!

இதோ நம்மைச் சிரிக்க வைக்கும் மற்றொரு அழகுணர்ச்சி ஆட்டிவைக்கும் சிங்கார நாட்டியத்தின் ஜதிஸ்வரம்,

குரும்பைமென் முலையாராடக்
கூந்தலின் நறவம் தோய்ந்த
இரும்புனல் ஆறுபாய
எறிதிரை சுருட்டும்தெண்ணீர்
கருங்கடல் புலவிநீங்கி,
நறுமணம் கமழ்ந்ததென்றால்,
முருந்துறழ் மூரலார்தம்
மிகுதியை மொழியலாமோ

?

இது அதிவீரராம பாண்டியன் நிடதநாட்டு அழகிகளை பற்றிக் கூறும் ஒரு அதிசயோக்தியான அற்புத நகைச்சுவை. அதாவது உயர்வு, நவிற்சி அணியின் உச்சக்கட்டம்.