பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேரை அறிய வேண்டியவர்கள்தானே! ஆதலால் காதல் என்பதில் நாம் காணும் நகைச்சுவைகளை ரசிக்கக் கற்றுக் கொள்ளுவோமே. இது ஒரு நஷ்டமில்லாத வியாபாரம், கஷ்டமில்லாத காரியம். இதை விட்டு விட்டுக் காதல் என்பதை, ஏதோ பேய் பிசாசைப் போன்ற, பயங்கரமான தொரு சீரியஸ் விஷயமாக எடுத்துக் கொண்டு ஏன் பெருமூச்சுடன் சிரமப்படவேணும்? அப்படிக் கஷ்டப்பட்ட தெல்லாம் போதுமய்யா போதும்,

இந்தக் காதலர்கள், பைத்தியம் முற்றும்போது எப்படியெல்லாம் காமெடியன்களாக மாறித் தொலைக்கிறார்கள் என்பதை இந்த நூலில் வரும் ஒரு சில நாடகக் காட்சிகள் மூலம் கண்டு ரசிப்போம்! கலை என்றாலே ஏதாவது ஒரு காட்சியை ரசமாகக் காட்டுவதுதானே.

ஊர் சிரிக்கிறது!

மணிமேகலை என்பதொரு காப்பியக் கதை அதில் சாதுவன் என்னும் காதலன் ஒருவன் வருகிறான். அவனுக்கு ஆதிரை என்னும் ஒரு பதிவிரதை மனைவி கப்பல் வியாபாரி யாகிய சாதுவன், கன்னிகள் வியாபாரத்தில் ஈடுபடுகிறான். வாழ்வுக் கடலில் காதல் கப்பல் கவிழ்கிறது! விதியால் உயிர் பிழைத்து மீண்டும் வருகிறான்.

அது போகட்டும். அதே கதையில் கிள்ளி என்ற சோழ அரசனது மகன் உதயகுமாரன் என்பவன் ஒரு கதாநாயகன்! இந்தப் பயலுக்கு மணிமேகலை என்ற பெண்ணைச் சுற்றிச் சுற்றி வருவதைத் தவிரவேறு ஒரு வேலையும் இருப்பதாகத் தெரியவில்லை. இது அந்தக் காலத்துக் கதாநாயகனுக்கு அமைந்த இலக்கணம் போல் இருக்கிறது. அந்தக் காலம் மாத்திரமென்ன? இந்தக் காலம் மட்டும் ரொம்ப வாழ்கிறதா என்ன?

இந்தக் காலத்து நாடகம் சினிமாக்களில் வரும் பெரும்பான்மைக் கதாநாயகர்களும், இதே காரியத்தைத்தான் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் புதுமை, கலை முன்னேற்றம் என்றெல்லாம் பேசி ரசிகர்களின் வயித்தெரிச்சலைக் கிளப்பி விடுகிறார்கள் விளம்பர வியாபாரிகள்!