பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பம் பகதூர்
குருபக்ஷ் சிங்

பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின் உத்திரவுப் படி அதை அதன் ஜோடியிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்கள். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும் அதன் துணையை அதனுடன் உலாவ அழைத்துப் போகாவிடில் பம் பகதூர் அட்டகாசம் செய்தது; கர்ஜித்தும் பிளிறியும் களேபரப்படுத்தியது. அதன் துணையை அதனுடன் இட்டுச் சென்றால் அது துணைக்குத் தொல்லை தந்தது. துணையின் முதுகில் தன் தும்பிக்கையைத் தூக்கிப் போடாமல் அது வெளியே நகர மறுத்தது. மத்தாதின் பம் பகதூரைக் கண்டித்தால், அது தன் கோபத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியது.

"கவலைப் படாதே, மத்தாதின்" என்று இளவரசர் மாவுத்தனைத் தேற்றினார். "நம் பம் பகதூர் தன்னை ஆடம்பரமாகக் காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறது. சிறிது காலமாக அந்த வாய்ப்பு அதுக்குக் கிடைக்க வில்லை. அடுத்த புதன்கிழமை, நான் என் புது மனைவியை அவளது புது வீட்டுக்கு அழைத்து வருவேன். அப்போ நீ பம் பகதூரை தடவுடலாக அலங்கரித்து, ரயில் நிலையத்துக்கு இட்டு வா. நாங்கள் அதன் மீது அமர்ந்து அரண்மனை சேர்வோம்."

பம், அதன் பெயருக்கேற்றபடி வீரமான யானை மட்டுமல்ல; மிகப் பெருமை உடையதும் கூட. அதன் இந்தக் குணத்தை இளவரசர் மிகப் பாராட்டினார். அரசு விழா மற்றும் ஊர்வலங்கள் அனைத்திலும், பம் பகதூர் கவனத்துக்கு உரியதாகத் திகழ வேண்டும் என்பதில் மகாராஜா அதிக அக்கறை காட்டினார். பூரண அலங்காரம் பெற்ற நிலையில் அதன் போக்குகள் நிறைவுற்று விளங்கும். சிறந்த பயிற்சி பெற்ற படைவீரன் அணிவகுப்பில் நடப்பதை விட உயரிய முறையில் அது நடந்து கொள்ளும். ஆனால் அதே பம் பகதூர் லாயத்தில் பெரும் தொல்லை செய்யும் மனித சுபாவங்களைக் கண்டறியும் அதீத உள்ளுணர்வு அதுக்கு இருந்தது.