பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதனால், பாதுகாப்பாளனின் சின்னஞ்சிறு குறை அல்லது ஒழுங் கீனமான செயல் கூட அதன் கோபத்தை வெகுவாகக் கிளறிவிடும்.

சில சமயம் பணியாளர்கள் பேசிக் கொள்வார்கள்: "பம் நல்ல யானை தான். ஆனால் மாவுத்தன் அதன் தீனியிலிருந்து திருட ஆரம்பித்த நாள் முதலாக, அது அவன் பேரில் வஞ்சம் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மிக நேர்த்தியான யானை என்ற பெருமையைக் கேட்பதில் பம் சந்தோஷப்படுமே."

இளவரசர் தன் புது மணப் பெண்ணுடன் உதயப்பூரிலிருந்து திரும்பி வந்தார். ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சாலை நெடுக நீண்ட கார் வரிசை குதிரைப் படையினர், தங்கள் எடுப்பான உடைகளோடு, அராபியக் குதிரைகள் மேல் மிடுக்காக அமர்ந்திருந்தனர். அணிகள் அனைத்தும் பூண்டு பம் பகதூர் நின்றது. மின்னும் பெரும் கவசம் அதன் பின்புறத்தை மறைத்திருந்தது. பொன்மய அம்பாரியில் கோர்க்கப் பட்டிருந்த சிறு பொன்மணிகள் கிணுகினுத்தன. அதன் தந்தங்களில் கூடத் தங்கத் தகடுகள் மிளிர்ந்தன. அதன் முதுகில் மத்தாதின், தான் இருந்த உயரத்தை உணர்ந்தவனாய், கீழே நின்ற கூட்டத்தை பார்த்திருந்தான்.

இளவரசரும் அவரது மகாராணியும் அம்பாரியில் ஏறிய போது கூட்டம் ஆரவாரம் செய்தது. பம் பகதூர் தன் துதிக்கையை உயர்த்தி வணங்கியது. ஊர்வலம் தொடங்கியது. பம் ராஜகம்பீரத்துடன் நடந்தது. அதனிடம் சதா குறைகண்ட மத்தாதின் கூட மனநிறைவு பெற்றான். மிக்க நளினத்துடன் ஆடி அசைந்து சென்ற பம் பகதூர், தன் முதுகில் சுமந்து வந்த அரச தம்பதிகளை அரண்மனை முன்வாசலில் இறக்கியது.

தன் மணமகளை விருந்தினருக்கு அறிமுகப்படுத்துமுன், இளவரசர் தன் யானையிடம் பேசினார்: "பம் பகதூர், இது உன் புதிய மகாராணி, நீ என்னைவிட அதிக ஆவலோடு இவளை எதிர்பார்த்திருக்கலாம்." பம் பகதூர் துதிக்கையை உயர்த்தி மகாராணிக்கு வணக்கம் செலுத்தியது.

அழகு மிக்க மகாராணி அன்பின், பிரியத்தின் அவதாரமாக விளங்கினாள். அவள் ஏறத்தாழ இளவரசர் உயரம் இருந்தாள். அகன்ற நெற்றியும், திரண்ட உதடுகளும் பெற்ற அவள் கண்கள் பெரியவை, கருமையானவை, ஒளிநிறைந்தவை. அவள் விழிகளால் பார்த்தது போலவே, அவற்றால் பேசவும் செய்தாள். யார் மீது அவள் பார்வை பட்டாலும் சரி, அவர்கள் முற்றிலும் வசியமானார்கள். நன்கு சுருதி மீட்டிய சிதார் வாத்தியத்தை லேசாகத் தொட்டு இசை எழுப்பும் திறனுடைய இறகு போலவே அவையும் இருந்தன.

அழகுக்கு வணக்கம் செலுத்துவது போல் பம் பகதூர் துதிக்கையைத் தூக்கியது.

102