பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மகாராணி தன் வாக்கைக் காப்பாற்றினாள். வாரம் ஒருமுறை பம் பகதூரைக் காண வந்தாள். அவள் பெற்ற வரவேற்பு அவளுக்கு மிக ஆனந்தம் தந்தது. சரியான மலை போலிருந்த ஒரு பிராணி, தன் துதிக்கையின் ஒரே வீச்சால் மெலிந்த சிறு உருவினளான அவளை நசுக்கிவிடக்கூடிய ஒன்று, அவளை எதிர்நோக்கி வாரம் முழுதும் காத்திருந்தது; அவளைக் கண்ட மகிழ்வில் உடல் புளகித்தது. இதை எண்ணவும் அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். அது அவளை அன்பாய் வருடும் முத்தமிடும் தன் துதிக்கை நுனியை அவள் கைகள் மீது தடவும்: அவள் பாதங்களைத் தொடும்.

அந்த மிருகம் அவளிடம் காட்டிய அன்பினால் மகாராணியின் உள்ளம் பெருமைப்பட்டது.

பம், மிகவலிமையான மரம் அல்லது தூணைத் துாள் தூளாக்கி விடக்கூடிய பலசாலி, அவள் முன்னிலையில் ஒரு குழந்தை போல் நடந்து கொள்ளும். அது மகாராணியின் கைகளையும் கால்களையும் முத்தமிடு கையில் அதன் வாய், குழந்தையின் வாய் போலவே, ஈரம் சுரக்கும். எவ்வளவு கூடுமோ அவ்வளவுக்கு அவள் அருகில் நிற்க அது விரும்பியது. ஒவ்வொரு முறையும் அவள் உணவு ஊட்டி முடிந்ததும், பம் தன் துதிக்கையால் அவளது மெல்லிடையை வளைத்து அவளைத் தன் தலைமீது தூக்கி வைக்கும். ஒரு தாய் தன் பிள்ளையைத் தூக்குவதை விட மென்மையாக அது அவளை அப்படி எடுக்கும். மகாராணி அதன் கட்டுகளை அவிழ்க்கச் செய்வாள். பம் அந்த இடம் முழுவதும் சுற்றித் திரியும். அது அவளை அரண்மனைக்கு எடுத்துச் செல்லும் மறுபடியும் துதிக்கை உயர்த்தி வணங்கும், அவள் கால்களைத் தொடும்; பிறகு வேகமாக அவள் இடுப்பைச் சுற்றி வளைக்கும். மறு கணம், மகாராணி தான் தனது பட்டாடை ஒரு சிறிதும் குலையாமல் தரைமீது நிற்பதைக் காண்பாள்.

இளவரசருக்கு அரசு அலுவல்கள் அதிகமாயின. அவர் அடிக்கடி அரண்மனையை விட்டு வெளியே செல்ல நேர்ந்தது. யானையைப் போய் பார்க்க அவருக்கு நேரமேயில்லை. மாறாக, மகாராணி அடிக்கடி வந்து பார்த்தாள். அப்படி வரும் சமயங்களை அவள் ஆவலோடு எதிர் நோக்கினாள். முந்திய நாளே இனிப்புத் தின்பண்டங்கள் தயாரிக்க உத்திரவிடுவாள். ஒவ்வொரு முறையும் அவை வெவ்வேறு ரகங்களாக இருக்கும்படி கவனித்துக் கொள்வாள். அவள் எப்போதும் அவற்றை பம் பகதூருக்குத் தன் கையாலேயே ஊட்டுவாள். அதுவரை ஒரு மனிதப் பிறவியிடமிருந்து தான் பெற்ற அன்பை விட ஒரு மிருகம் அவளிடம் காட்டுகிற அன்பு எவ்வளவு அதிகமென்மையாக இருக்கிறது என்று அவள் சிந்திப்பாள்.

105