பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதற்கிடையில் பம்முக்கு மத்தாதினிடமுள்ள வெறுப்பு, மகாராணியிடம் அது கொண்ட அன்பு வலிதாக வளர்ந்தது போல், வேகமாக அதிகரித்தது. மத்தாதினுக்கு ஒரு துண்டு நிலத்தை இளவரசர் தானமாக வழங்கியிருந்தார். அதில் அவன் ஒரு குடிசை கட்டி, அதைச் சுற்றி ஒரு சிறு தோட்டம் அமைத்திருந்தான். அவன் தன் சுக செளகரியங்களைக் கவனிக்கும் போது, பம் பகதூருக்கு உரிய உணவைக் குறைத்து வந்தான். இரண்டு நாட்கள் பம் பகதூர் தன் உணவைத் தொடவில்லை; மத்தாதினை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை.

ஒரு நாள் இளவரசர் வேட்டைக்குப் போகத் தீர்மானித்தார். முன் பெல்லாம் அவர் புலிவேட்டைக்குப் போன போதெல்லாம் பம் பகதூர் மேல் சவாரி செய்வார். இம் முறை மத்தாதின் பம்மின் மனநிலை பற்றிக் கவலை கொண்டான். சென்ற இரண்டு நாட்களாக பம் சீக்காக இருக்கிறது; அதனால் வேட்டைக்காகப் பயிற்சி பெற்ற வேறொரு யானையை ஏற்பாடு செய்திருப்பதாக அவன் இளவரசரிடம் கூறினான்.

வேட்டை கோஷ்டி யானை லாயம் அருகாகச் சென்றது. திறந்த சன்னல் வழியாக பம் அதைப் பார்த்தது. அது துயர் நிறைந்த உரத்த குரல் எழுப்பித் தன் எதிர்ப்பை அறிவித்தது. அதை எவரும் கவனிக்கவில்லை. அது மனம் தளர்ந்து மெளனமாயிற்று.

வேட்டை கோஷ்டியை அனுப்பிவிட்டு, மத்தாதின் தனது தோட்டத்துக்குப் போனான். செடிகள், பூப்பாத்திகளில் வேலை செய்யலானான். அவனுக்குக்குறைந்த சம்பளம் தான் எனினும் அவன் மிக வசதியாக வாழ்ந்தான். இதை அனைவரும் அறிவர்.

பும் நாள் முழுவதும் குமைந்து குமுறியது; தன் உள்ளத்தில் வஞ்சத்தை அசைபோட்டது. ஒரு கவளம் உணவைக் கூட அது தொடவில்லை. பிற்பகல் வேளையில், பணியாளர்கள் அதன் போக்கில் ஏதோ விசித் திரம் கண்டார்கள். மத்தாதினிடம் தெரிவித்தார்கள். அவன் வந்தான். பம்மை திட்டத் தொடங்கினான். அவன் பக்கம் பாராமலே பம் திரும்பிக் கொண்டது.

பம்மின் கால்களைப் பிணைத்த சங்கிலிகள் உறுதியாய் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்த பிறகு மத்தாதின் யானையை செம்மையாக அடித்தான். பம் தீனியை தின்றிருக்கிறதா என்று பார்க்க அவன் திரும்பினான். அப்போது திடீரென்று பம்மின் துதிக்கை மின்னல் வேகத்தில் பாய்ந்து மத்தாதினை தரையில் விழ அடித்தது. பம் தனது பெரிய பாதத்தை மாவுத்தனின் மார்பில் பதித்தது. ஒரு நொடியில் மத்தாதின் கூழாக நசுக்கப்பட்டான். பம் சங்கிலிகளை அறுத்து எறிந்தது. பணியாளர்கள் பயத்தால் அலறிச் சிதறி ஓடினார்கள்.

108