பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பம் பகதூர் லாயத்தை விட்டு வெளியேறி, மத்தாதின் தோட்டம் நோக்கிச் சென்றது. செடிகளைப் பிடுங்கி வீசியது; பூப்பாத்திகளை மிதித்து நாசப்படுத்தியது. மத்தாதின் குழந்தைகள் பயந்து, குடிசையை விட்டு ஓடினார்கள். பம் குடிசையைத் தகர்த்து அதை மண்னோடு மண்ணாக்கியது.

பம் பகதூர் வெறிபிடித்து அலைகிறது என்ற செய்தி மகாராணியை எட்டியது.

போலீஸ் மேலதிகாரி, யானை மேலும் பலருக்கு தீங்கு விளைவிக்கும், ஆகையால் அதை சுட்டுக் கொல்ல வேண்டும் என அனுமதி கோரினார்.

"ஆனால் மத்தாதின் ஒருவனை மட்டுமே அது தாக்கியது என்று தானே நீங்கள் தெரிவித்தீர்கள்" என்று மகாராணி மறுத்துரைத்தாள்.

"ஆம் மகாராணி அது மத்தாதின் தம்பி வீடு நோக்கிப் போகிறது என்று எனக்கு செய்தி கிடைத்திருக்கிறது. அவனையும் அது விட்டு வைக்காது."

"மத்தாதின் தம்பியா? அவன் என்ன செய்கிறான்?"

"அவன் லாயத்தை மேற்பார்வை பார்க்கிறான், மகாராணி."

"அப்படியானால் அவனும் மத்தாதின் மாதிரி பெரிய திருடனாகத் தான் இருக்க வேண்டும். பம் பகதூரைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்னை பம்மிடம் உடனே அழைத்துப் போங்கள்" என்று மகாராணி கூறினாள்.

அவள் தன் அறைக்குப் போய், முந்திய முறை பம் பகதூரை காணச் செல்கையில் அணிந்திருந்த பட்டாடையை உடுத்துக் கொண்டாள்.

"மகாராணி பெரிய ஆபத்தை அணுகுகிறீர்கள். அது மிக்க அபாயமாகலாம்" என்று போலீஸ் மேலதிகாரி எடுத்துச் சொன்னார்.

"நான் சொல்கிறபடி செய்யுங்கள்" என்று மகாராணி உத்திரவிட்டாள். "என் கார் வரட்டும். நீங்கள் அவசியம் என்று கருதுகிற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்யுங்கள்."

சற்று நேரத்தில் மகாராணியின் கார் சாலையில் விரைந்தது. ஆயுதங்களோடு குதிரை வீரர்கள் காரைத் தொடர்ந்து சென்றார்கள். அதே சாலையின் மறுமுனையிலிருந்து பம் பகதூர் வந்தது. அது ஒரு குளத்தின் அருகே நின்றது. துதிக்கை நிறைய நீரை மொண்டு, அது மீண்டும் நடந்தது. அதன் அருகே வரத் துணிந்தவர் மீது அது சேற்று நீரை வீசிப் பரிசளித்தது. பம் பிறகு யாருக்கும் தீங்கு புரியவில்லை.

இடையே சிறிது தொலைவே இருந்தபோது, மகாராணி காரை நிறுத்தி, கீழே இறங்கினாள். போலீஸ் மேலதிகாரியை தன்னுடன் வர வேண்டாம் என்று அவள் தடுத்துவிட்டாள்.

"உங்கள் குதிரை வீரர்களைத் தயாராக வைத்திருங்கள்" என்று அவள்

109