பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஸ்டாம்பு ஆல்பம்
சுந்தர ராமசாமி


ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாகராஜன் சிங்கப்பூரிலிருந்து அவன் மாமா அனுப்பி வைத்த ஆல்பத்தை எல்லோரிடமும் காட்டினான். பள்ளிக் கூடத்தில் காலை முதல்மணி அடிப்பதுவரை பையன்கள் நாகராஜனைச் கற்றிச் சூழ நின்று கொண்டு ஆல்பத்தைப் பார்த்தார்கள். மதியம் இடை வேளையிலும் அவனை மொய்த்தார்கள். கோஷ்டி கோஷ்டியாக வீட்டிற்கு வந்தும் பார்த்து விட்டுப் போனார்கள். பொறுமையோடு எல்லோருக்கும் காட்டினான் அவன். யாரும் ஆல்பத்தைத் தொடக்கூடாது என்று மட்டும் சொன்னான். அவன் மடியில் வைத்தபடி ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். பையன்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வகுப்புப் பெண்களுக்கும் நாகராஜனின் புதிய ஆல்பத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை. பெண்கள் சார்பில் பார்வதி வந்து கேட்டாள். அவள் தைரியத்திற்குப் பெயர் போனவள். ஆல்பத்திற்கு அட்டை போட்டு அவள் கையில் கொடுத்தான் நாகராஜன். எல்லாப் பெண்களும் பார்த்த பின் மாலையில் ஆல்பம் கைக்கு வந்து சேர்ந்தது.

இப்பொழுது ராஜப்பாவின் ஆல்பத்தைப்பற்றி பேசுவாரில்லை. அவனுடைய புகழ் மங்கித்தான் போய்விட்டது.

ராஜப்பாவின் ஆல்பம் மாணவர்கள் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. தேனி தேன் சேர்ப்பது மாதிரி ஒவ்வொரு ஸ்டாம்பாகச் சேர்த்து வைத்திருந்தான். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனமில்லை அவனுக்கு. காலையில் எட்டு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவான். ஸ்டாம்பு சேர்க்கும் பையன்கள் வீடுதோறும் ஏறி இறங்குவான். இரண்டு ஆஸ்திரேலியாவைக் கொடுத்துவிட்டு ஒரு பின்லண்டு வாங்குவான். இரண்டு பாகிஸ்தான் வாங்கிக் கொண்டு ஒரு ருஷ்யாவைக்