பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்த்தான். பூட்டித்தான் இருந்தது. திறந்து பார்த்தால் என்ன? மேஜை மேலிருந்து சாவியைக் கண்டெடுத்தான். ஏணிப்படியோரம் சென்று ஒரு தடவை கீழே குனிந்து பார்த்துவிட்டு, சட்டென்று டிராயரைத் திறந்தான். மேலாக ஆல்பம் இருந்தது. முதல் பக்கத்தைத் திருப்ப, அதில் எழுதியிருந்ததை வாசித்தான். நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொண்டது. ஒரு நிமிஷத்தில் டிராயரைப் பூட்டினான். ஆல்பத்தை எடுத்துச் சட்டைக்குள் நிக்கரில் செருகிக் கொண்டு கீழிறங்கி வீட்டைப் பார்த்து ஒட்டமாக ஒடினான்.

நேராக வீட்டிற்குள் சென்று புத்தக அலமாரிக்குப் பின்னால் ஆல்பத்தை மறைத்து வைத்தான். வாசல் பக்கம் வந்தான். உடம்பு பூராவும் கொதிப்பது போலிருந்தது. தொண்டை உலர்ந்தது. முகத்தில் ஜிவ் ஜிவ்வென்று ரத்தம் குத்திற்று.

இரவு எட்டு மணிக்கு எதிர்வீட்டு அப்பு வந்தான். கையையும் தலையையும் ஆட்டிக்கொண்டு விஷயத்தைச் சொன்னான். நாகராஜன் ஸ்டாம்பு ஆல்பத்தைக் காணவில்லையாம்! அவனும் நாகராஜனுமாக டவுனுக்குச் சென்றிருந்தார்களாம். திரும்பி வந்து பார்க்கிறபொழுது மாயமாக மறைந்துவிட்டதாம் ஆல்பம்.

ராஜப்பாவுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. அவன் எப்படியாவது போய்விட்டால் போதுமென்றிருந்தது. அப்பு சென்றதும் அறைக்குள் வந்தான். கதவைச் சாத்தினான். அலமாரிக்கு பின்னாலிருந்து ஆல்பத்தை எடுத்தாள். கை விறைத்தது. ஜன்னல் வழியாக யாராவது பார்த்து விடுவார்கள் என்று பயந்து மீண்டும் ஆல்பத்தை அலமாரிக்குப் பின்புறம் திணித்தான்.

இரவு சாப்பிட முடியவில்லை. வயிற்றை அடைத்துக் கொண்டு விட்டது. வீட்டிலுள்ள எல்லோரும் அவன் முகத்தைப் பார்த்து, "என்னடா, என்னடா" என்று கேட்டார்கள். தன்னுடைய முகம் பயங்கரமாக கோணிக் கொண்டிருப்பது மாதிரித் தோன்றிற்று அவனுக்கு.

எப்படியாவது துாங்கிவிடுவோம் என்று படுக்கையை விரித்து படுத்தான். தூக்கம் வரவில்லை. தான் துரங்கிக் கொண்டிருக்கிறபொழுது யாராவது அலமாரிக்குப் பின்னாலிருந்து ஆல்பத்தைக் கண்டெடுத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, ஆல்பத்தை எடுத்துவந்து தலையணைக்கடியில் வைத்துக் கொண்டான்.

இரவு எப்பொழுது தூங்கினான் என்பது அவனுக்கே தெரியாது. காலையில் கண் விழுத்த பின்பும் தலையணையில் இருந்து ஆல்பத்தை எடுக்க முடியவில்லை. தாயாரும் தகப்பனாரும் ஒருவர் மாற்றி ஒருவர் அங்கு

119