பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீணாக்குவதைக் கண்டதும் அவன் பெற்றோர்கள் கவலைப்படலானார்கள். அவன் அப்பா அவனைக் கண்டித்தார். ஆனால் அப்பு அதைச் சட்டை செய்யவில்லை. அவன் சிரத்தையாய்க் கவனிப்பது போல் நடித்தான். எனினும், தந்தையின் வார்த்தைகள் ஒரு காதில் நுழைந்து மறு காது வழியாக வெளியேறின.

அப்பு புகைபிடிக்கத் தொடங்கினான். அவன் தந்தை அதை அறிந்து ஆத்திரம் கொண்டு, அவனைத் திட்டினார். அப்பு வெகுவாக அழுதான். அதனால் அவன் அம்மா குழம்பினாள். அவனை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினாள். பிறகு அவனுக்குச் சிறிது பணம் தந்தாள். அவனை விளையாட அனுப்பினாள். அப்புவின் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். தன் மகனின் கெட்ட பழக்கங்களுக்கும் ஊதாரித்தன நடவடிக்கைகளுக்கும் அவர் தன்னையே குறை கூறிக்கொண்டார். நிலைமை மிக முற்றி விட்டதோ? மிகுந்த யோசனைக்குப் பிறகு, அப்புவின் அப்பா தன் மகனின் ஆசிரியரது யோசனையையும் உதவியையும் நாடத் தீர்மானித்தார். ஆசிரியர் தம்மால் இயன்றதைச் செய்வதாக வாக்களித்தார்.

ஒரு நாள், ஆசிரியர் அப்புவைக் கூப்பிட்டனுப்பினார். அவனைப் பிரியமாய்த் தட்டிக் கொடுத்து, பிற்பகலில் அவனைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்பு தடுமாறித் தவித்தான். ஆசிரியர் ஏன் தன்னைப் பார்க்க விரும்பினார்; தன் படிப்பு சம்பந்தமாக இருக்குமோ? பெருக்கல் வாய்ப்பாட்டில் அவர் தன்னைக் கேள்விகள் கேட்பாரோ?

ஆசிரியர் வீட்டு வாசலில் அப்பு தயங்கி நின்றான். ஆசிரியர் அவனை உள்ளே கூப்பிட்டார், அன்பாகப் பேசினார். அவனை உட்காரச் செர்ன்னார். அவர் நடந்து கொண்ட விதம் அப்புவின் பயத்தை நீக்கியது. அவன் நெஞ்சுத்துடிப்பு சீராகியது. அவன் நிம்மதிபெற்றான்.

"அப்பு, அடுத்த மாதம் இடைத்தேர்வு இருக்கிறதே. நீ நன்றாகப் படித்திருக்கிறாயா?" என்று ஆசிரியர் மென்மையாக விசாரித்தார். அப்பு தலையசைத்தான். ஆசிரியரின் நோக்கம் என்னவாக இருக்கும் என அவன் யோசித்தான். ஆனால் ஆசிரியர் சும்மா பத்திரிகையை எடுத்து அதைப் படிக்கலானார்.

அப்பு சோம்பலுடன் சுற்றி நோக்கினான். பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தின் மீது அவன் பார்வை படிந்தது. விண்வெளிக் கப்பல் மேலே கிளம்புவதைக் காட்டுகிற நிழற்படம் அது. அப்பு படத்தையே கூர்ந்து கவனித்தான். ராக்கெட்டில் அவன் இருப்பது போலவும், அவன் விண்வெளியில் செலுத்தப்படுவது போலவும் அவனுக்குத் தோன்றியது. அவன் பரபரத்தான். அப்புவின் மூளையில் கேள்விகள் துறுதுறுத்தன. ஆனால் அவற்றை வெளிப்படுத்த அவன் தயங்கினான்.

125