பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிள்ளையைக் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். கிழவி மூச்சுவிடத் திணறினாள். தலைமை ஆசிரியர் நரேனையும் மகேஷையும் ஏசி கிழவியை அவள் இடத்தில் கொண்டுவிடும்படி அவர் தபனை கேட்டுக் கொண்டார்.

இரண்டு வாரங்களுக்குப்பிறகு ஒரு நாள், தலைமை ஆசிரியர் உலாப் போய்விட்டு வீடு திரும்பும் வேளை வழியில், முரட்டுக் காளை ஒரு கால் முறிந்து கீழே கிடப்பதையும், அதன் அருகில் தபன் மண்டியிட்டு இருப்பதையும் கண்டார். அவன் காளையின் அடிபட்ட காலுக்கு ஏதோ மருந்து தடவி, கட்டு கட்டிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் நீர் வழிந்தது. தலைமை ஆசிரியர் நெருங்கி வந்து நிற்கவும் அவன் திடுக் கிட்டான். கரம் கூப்பி அவரை வணங்கினான். "நீ இங்கே என்ன பண்ணுகிறாய், தபன்? " என்று அவர் கேட்டார்.

"ஐயா, யாரோ சில துஷ்டப் பையன்கள் காளையின் காலை முறித்திருக்கிறார்கள். அது ரொம்ப வேதனைப்படுகிறது. ஐயா, ஊமைப் பிராணிகளை வதைப்பது தவறு இல்லையா?" என்றான் தயன் வருத்தமாய்.

"அன்றொரு நாள் இதே காளைமீது தானே நீ சவாரி செய்தாய்; இது துஷ்ட மிருகம், இதை அடக்க வேண்டும் என்று சொன்னாயே? இன்று இது உன் பார்வையில் நல்ல பிராணியானது எப்படி?"

"ஐயா, இது கொடிய மிருகமாகத் தான் இருந்தது. ஆனால்.நான் சவாரி செய்த நாள் முதல் இது திருந்திவிட்டது. மனிதர்களை முட்டுவதை விட்டுவிட்டது. அத்தோடு, அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிப் போகிறது. இதை அவர்கள் அடித்திருக்கக் கூடாது. இது மிகவும் வேதனைப்படுகிறது. நான் சில மூலிகைகளை மென்று அந்தக் கூழை வைத்து, அடிபட்ட காலுக்குக் கட்டு போட்டிருக்கிறேன். அது காயத்தைக் குணப்படுத்தும் என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்" என தயன் சொன்னான். அந்தக் காளைக்காக அவனுள் அனுதாபம் நிறைந்து, அவன் கண்களில் நீர்.

தலைமை ஆசிரியர் சிந்தனையில் ஆழ்ந்து நின்றார். பிறகு தயன் முகத்தைப் பார்த்தார். அவனைப் பிரியத்துடன் தட்டிக் கொடுத்தார். எதுவும் பேசாது நடக்கலானார். அவர் கண்கள் பனித்திருந்தன.

ஞானபீடம் உயர்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா நாள். கெளஹாத்தி கல்லூரி ஒன்றின் முதல்வர் விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். இம்முறை, பள்ளியில் மிகச் சிறந்த நடத்தை உடைய மாணவனுக்கு ஒரு விசேஷப் பரிசு வழங்குவது என்று தலைமை ஆசிரியர் ரபீன் பருவா தீர்மானித்திருந்தார். மூன்று நூல்கள்-மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள்-பரிசாக வழங்கப்பட இருந்தன.

9