பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வந்தது. தன் அலகால் சிப்பி மீது தட்டி, "யாரது உள்ளே? கதவைத் திற" என்று அதட்டலாய் கூறியது.

சிப்பிப் புழு அதிருப்தி அடைந்தது. யாரோ மோசமான கழிசடை என்னைத் தொந்தரவு செய்கிறது" என்று அது தனக்குள் சொல்லிக் கொண்டது. பிறகு, "யார் அது?" என்று கத்தியது.

"நான் கழிசடை இல்லை. நான் ஒரு காகம் அதிலும் புத்திசாலிக் காகம். கதவைத் திறந்து வெளியே வா."

"நான் ஏன் வெளியே வரவேண்டும்?"

"சும்மாப்பேசி மகிழ, அவ்வளவு தான் என்று காகம் மென்மையாய் சொன்னது.

“எனக்குப் பேச நேரமில்லை. நான் வெளியே வரவில்லை."

"நல்லது. ரொம்ப சரி. ஆனால் அங்கே உள்ளே நீ என்ன பண்ணுகிறாய்?"

"நான் முத்து உண்டாக்குவதில் கருத்தாக இருக்கிறேன். மேலும், உன்னைப் போன்ற அசிங்கமான அழகற்ற ஒரு ஜந்துவுடன் நான் ஏன் பேசவேண்டும்?" என்று சிப்பிப் புழு மிடுக்காகக் கூறியது.

"ஒகோ-எவ்வளவு உயர்வு!" என்று காகம் சிரித்தது. "என் அருமை நண்பனே, நான் விரும்பியதெல்லாம் கடலின் அமைப்பு, அளவு பற்றிய சில கேள்விகளை உன்னிடம் கேட்கலாம் என்பது தான். இந்தப் பரந்த உலகம் பற்றிய சில விஷயங்களை உன்னிடம் சொல்லவும் விரும்பினேன்."

"ஏனோ"

"ஏனென்றால், எனக்கு அறிவியலில் அதிக ஆர்வம். நான் ஒரு பல்கலைக்கழகத்தின் கூரை மேல் வசிக்கிறேன். அறிவியல் பேராசிரியரின் சொற்பொழிவுகளைக் கேட்கிறேன். அதனால் அறிவியலில் எனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பற்றியும், அங்கு நடப்பது குறித்தும் கேட்டறிய விரும்புகிறேன். புறா முட்டைகள், குருவி முட்டைகள் எல்லாம் அங்கு உள்ளனவா?"

"என்ன பேத்தல்" என்று வெடுக்கெனப் பேசியது சிப்பிப் புழு. "புறாக்களும் குருவிகளும் கடலில் இருப்பது போல் தான்!"

"அதைத் தானே நான் உன்னிடம் கேட்டறிய விரும்பினேன்."

"மடத்தனமான கேள்விகள் கேட்காதே" என்றது சிப்பிப் புழு. "கடலில், என்னை போல், லட்சக்கணக்கான சிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அனைத்தினும் நானே பெரியவன். அதனால் நான் மற்ற சிப்பிகளுடன் பேசுவதில்லை. ஆயிரமாயிரம் வகை வர்ணமீன்கள் இருக்கின்றன; பல்லாயிரம் வகைச் செடிகள் இருக்கின்றன. அவ்வளவுதான்.

131