பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உன்னைப் போன்ற முட்டாள்தன அசட்டுப் பிராணிகள் அங்கு கீழே இல்லை."

காகம் சிரித்தது. நீ என்னை முட்டாள் என்பதில் எனக்கு கவலை யில்லை. உண்மையில் நான் முட்டாள் இல்லை. நான் ஒரு காகம்- அதிலும், புத்திசாலிக் காகம், ஆனால், நண்பனே, நீ இதை எல்லாம் உன் சிறிய பொந்துக்குள் இருந்தபடியே சொல்கிறாயே, ஏன் நீ வெளியே வரக்கூடாது?"

"உனக்கு நல்ல பண்பு கிடையாதா? என்னுடன் நெருக்கமாய்ப் பேச உனக்கு என்ன துணிச்சல் நான் உன் நண்பன் இல்லை."

"நீ கடல் அரசன் போல் அல்லவா பேசுகிறாய்!"

"சந்தேகம் இல்லாமல்-நான் தான் முத்துக்களை உண்டாக்குகிறேன். அது கடலுக்குக் கீர்த்தி சேர்க்கிறது. எல்லாம் என்னால் தான்" என்றது சிப்பிப் புழு.

காகம் குறும் சிரிப்புடன் சொன்னது: "அப்படியானால் நான் அவசியம் பார்க்க வேண்டும். இப்படி ஒரு அற்புதமான பொருளை நான் பார்த்ததேயில்லை."

"நான் பொருள் இல்லை-நான் சிப்பிப் புழு, முத்துக்களை ஆக்குவோன்."

"நல்லது, நல்லது. மாட்சிமை மிக்கவரே, தயவு பண்ணி வெளியே வந்து, உம்மைக் காணும் வாய்ப்பை எனக்கு அளிக்கமாட்டிரா?" என்று காகம் நகைச் சுவையுடன் கூறியது.

இல்லை; மாட்டேன். நான் கதவைத் திறக்க முடியாது. எனக்கு அதிக வேலை."

"நீ உன் முத்தைப் பிறகு செய்யலாம். இப்ப கதவை திற. நான் எளிய, சாதாரண காகம், உன்னைப் போன்ற முக்கிய நபரை-முத்து செய்யக் கூடியவரை, பார்க்க ஆசைப்படுகிறேன். நான் முத்தையும் பார்க்க வேண்டும். என் வாழ்வில் இதுவரை நான் ஒரு முத்தைக் கண்டதில்லை."

"நான் தான் சொல்லிவிட்டேனே, நான் திறக்கமாட்டேன். நீ பெரிய புத்திசாலி என்று நீ நினைத்தால், நீயே ஏன் அதை திறக்கக் கூடாது?"

சிப்பிப் புழு இப்படிக் காகத்தை கேலி பண்ண முடிந்தது. ஏனெனில், தன் சிப்பியின் மூடியை காகம் ஒரு போதும் திறக்க இயலாது என அது உறுதியாக நம்பியது.

ஆனால் இப்போது காகம் கோபம் கொண்டது.

"நல்லது. அது தான் உன் விருப்பம் என்றால், நான் செய்து காட்டுவேன். நடப்பது உனக்குப் பிடிக்காது போனால் என்னைக் குறை கூறாதே."

132