பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"ஆமாம்."

அறையின் வடபுறச் சுவரை அவர் கூர்ந்து கவனித்தார். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். ராஜ வங்கப் புலி ஒன்றின் தோல், தலையோடு அங்கே தொங்கியது.

"அதைத் தெரிகிறதா?" என்று கேட்டேன்.

"அதேதான். இல்லையா?"

"ஆம், காதருகில் இருக்கிற துளையைப் பாருங்களேன்."

"சுடுவதில் நீ மன்னன். இப்பவும் அப்படித்தானே?"

தெரியாது. சிறிது காலமாக நான் சோதனை செய்யவில்லை. நான் வேட்டையாடுவதை நிறுத்தி ஏழு வருடங்கள் ஆகின்றன."

"ஏன்?"

"சுட்டது போதும் என்று தான். எனக்கும் வயதாகிறது இல்லையா? மிருகங்களைச் சுட வேண்டும் என்று தோன்றவில்லை."

"மரக்கறி உண்பவனாக மாறிவிட்டாயா?"

"இல்லை."

"பின்னே என்ன? சுடுவது என்பது கொல்வது மட்டுமே. ஒரு புலியை, முதலையை அல்லது காட்டெருமையைச் சுடுகிறாய். அதன் தோலை எடுத்து, தலையைப் பதம் பண்ணி, அல்லது கொம்புகளைச் சீர்ப்படுத்தி சுவரில் மாட்டிவைக்கிறாய். உன் வெற்றிகளைக் கண்டு சிலர் வியக்கிறார்கள். வேறு சிலர் பயப்படுகிறார்கள். உனக்கோ அவை உன் இளமைக் கால வீரசாகசங்களின் சின்னங்கள். ஆனால் நீ ஆட்டையும் கோழியையும் மற்றதையும் தின்கிற போது என்னாகிறது? நீ அவற்றைக் கொல்வதோடு நிற்பதில்லையே! மென்று சுவைத்து ஜீரணமும் பண்ணிவிடுகிறாய். இது ரொம்ப மேலான காரியமோ?"

நான் சொல்வதற்கு எதுவுமில்லை. கார்த்திக் தேநீர் கொண்டு தந்தான், காந்தி பாபு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். தேநீர்க் கோப்பையை எடுப்பதற்கு முன் அவர் மறுபடி நடுங்கினார். ஒரு வாய் உறிஞ்சிவிட்டு அவர் சொன்னார்: "இயற்கையின் அடிப்படை விதியே இதுதான். ஒரு பிராணி மற்றொன்றைத் தின்ன வேண்டும். அதை வேறொன்று விழுங்கும். அதோ அங்கே பொறுமையாய்க் காத்திருக்கும் பல்லியைப் பார்"

கிங் அன்ட் கோ காலண்டருக்குச் சற்று மேலே ஒரு பல்லி, பூச்சி ஒன்றைக் கண்கொட்டாது பார்த்திருந்தது. நாங்கள் அதைக் கவனித்தோம். அது முதலில் அசையாதிருந்தது. பிறகு மெதுவாக, எச்சரிக்கையோடு அசைந்து முன்னேறியது; முடிவில் ஒரே பாய்ச்சலில் அந்தப் பூச்சியைப் பிடித்துவிட்டது.

13